Last Updated : 20 Mar, 2020 05:53 PM

 

Published : 20 Mar 2020 05:53 PM
Last Updated : 20 Mar 2020 05:53 PM

இந்தியாவில் 206 பேருக்கு கரோனா பாதிப்பு: கண்காணிப்பில் 6,700 பேர் 

இந்தியாவில் கரோனா வைரஸ் | பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

இந்தியாவில் இதுவரை 206 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்பு கொண்ட 6,700 க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதையும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவில் இந்நோய் பாதிப்புக்குள்ளானவரின் எண்ணிக்கை 206ஐத் தொட்டுள்ளது.

இதனை அடுத்து நாடு தழுவிய அளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு முக்கியமான பகுதியாக வரும் 22-ம் தேதி (ஞாயிறு) அன்று ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தற்போது கரோனா வைரஸ் குறித்து முதல்வர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி வருகிறார்.

இந்தியாவில் கரோனா வைரஸ் மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:

''இந்தியாவில் இதுவரை 206 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பு கொண்ட 6,700 க்கும் மேற்பட்டோர் சந்தேகத்தின் பேரில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகளின் திறன்களை வலுப்படுத்துவதற்காக மத்திய குழுக்கள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கோவிட் 19-ஐ எதிர்த்துப் போராடுவதற்கு சமூக இடைவெளி முதன்மையானது. எந்தவொரு அவசர அழைப்புக்கும் கட்டணமில்லா எண் 1075-ஐப் பயன்படுத்திக் கொள்ளலாம். அரசாங்கம் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜனதா ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஒரு நாள் ஒத்துழைப்பு மக்களின் தொடர்பு சங்கிலிகளைத் துண்டிக்க உதவும்.

கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு அத்தியாவசியப் பொருட்களுக்குப் பஞ்சமில்லை.

ஜெய்ப்பூரில் வெள்ளிக்கிழமை இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அவர் கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இறந்தவர்களில் கணக்கிடப்படமாட்டார். நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு என்று கணக்கிடப்பட்டுள்ளது''.

இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x