Published : 20 Mar 2020 03:02 PM
Last Updated : 20 Mar 2020 03:02 PM

‘‘ஓட்டல் தந்திரம் வென்றது; ஜனநாயகம் வீழ்ந்தது’’- பாஜக மீது காங்கிரஸ் தலைவர்கள் கடும் சாடல்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

புதுடெல்லி

மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலிலேயே ஜனநாயகத்தை பாஜக குழிதோண்டி புதைத்துள்ளது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதன்தொடர்ச்சியாக, அவரது ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏக்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.

இதனால் பெரும்பான்மை இல்லாத சூழலில் முதல்வர் கமல்நாத் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை. இதையடுத்து
இந்த சூழலில், மத்திய பிரதேச சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடரை இன்று கூட்ட வேண்டும் என்றும், மாலை 5 மணிக்குள்ளாக அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதன்படி இன்று பிற்பகல் ம.பி. சட்டப்பேரவைக் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லால்ஜி டாண்டனிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ஓட்டல் தந்திரத்தால் ஜனநாயகத்தை வீழ்த்திய பாஜக’’ எனக் கூறினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் கூறுகையில் ‘‘மத்திய பிரதேசத்தில் பட்டப்பகலிலேயே ஜனநாயகத்தை பாஜக குழிதோண்டி புதைத்துள்ளது.’’ எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் அவினாஷ் பாண்டே கூறுகையில் ‘‘தேர்தலையும், ஜனநாயகத்தையும் பாஜக அழித்து விட்ட பிறகு பதவி விலகியுள்ளார் கமல்நாத்’’ எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x