Published : 20 Mar 2020 02:39 PM
Last Updated : 20 Mar 2020 02:39 PM
நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் பலாத்கார -கொலை வழக்கில் பல்வேறு தாமதங்களுக்கும், சட்ட நடைமுறைகளுக்கும் பிறகு தூக்குத் தண்டனை கைதிகளான 4 பேர் இன்று காலை தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து பன்னாட்டு ஜூரிஸ்டுகள் ஆணையம் கடும் கண்டனம் வெளியிட்டு, குற்றமிழைப்பவர்களுக்கு மரண தண்டனை என்பது, ‘சட்டத்தின் ஆட்சி மீதான அவமதிப்பாகும். பெண்களுக்கான நீதி அணுக்கத்தை இது மேம்படுத்தாது’ என்று தெரிவித்துள்ளனர்.
தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை கண்டித்த ஆணையம் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்க வேண்டி வலியுறுத்தியுள்ளது, பெண்களுக்கு எதிரான வன்முறை மட்டுமல்ல எந்த ஒரு வன்முறையையும் அச்சுறுத்த வேண்டுமெனில் அமைப்பு ரீதியான மாற்றங்களை சட்டங்களில் கொண்டு வர வேண்டும், மேலும் பெண்கள் நீதியை அணுகுவதில் மேம்பாடு அடையுமாறு அந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பன்னாட்டு ஜூரிஸ்டுகள் ஆணையத்தின் ஆசியா-பசிபிக் இயக்குநர் கூறும்போது, “அரசு அளிக்கும் தூக்கு தண்டனைகள் மரண தண்டனைகள் என்பது பொதுமக்கள் பார்க்கும் நாடக அரங்கை விடவும் கொஞ்சம் அதிகமான நாடகீயம் கொண்டது. இதனால் வன்முறையை கொண்டாடுவதும், அதை நிரந்தரமாக்குவதும் கூட நடக்கும் ரிஸ்க்கை கொண்டது, சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதலாகும் இது. குற்றங்கள் எப்படி மிக மோசமானவையோ அதேபோல்தான் மரண தண்டனை விதிப்பும் நிறைவேற்றமும் , இதனால் குற்றம் செய்ய பயம் ஏற்படும் என்ற கோட்பாடு பலமுறை தோல்வியடைந்துள்ளது. இதனால் பெண்களின் வாழ்க்கையும் முன்னேறியதாக ஆதாரங்கள் இல்லை” என்றார்.
மேலும் மற்ற நாடுகள் போல் மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நடைமுறைகள் குறித்து இந்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று இந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மூத்த வழக்கறிஞரும் மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான விருந்தா குரோவர் கூறும்போது, “2013-ல் குற்ற சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டன. ஆனாலும் பாலியல் பலாத்காரங்கள் குறையவில்லை. விசாரணைகள், வழக்குகள், பாலியல் குற்றங்களை உறுதி செய்வது ஆகியவற்றில் உள்ள இடைவெளிகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்பதை விடுட்து பாதிக்கப்பட்டோரை நோக்கிய நடைமுறைகள், குற்றவாளிகளை தூக்கிலிடுவது குறித்த கவர்ச்சி நம் சொல்லாடல்களை கடத்திச் சென்று விடுகிறது.
ஆனால் பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு, கவுரவம், கண்ணியம், ஆண்களுக்குச் சமமானவர்கள் என்ற சமத்துவம் ஆகியவை இந்தியாவில் இன்னமும் போராட்டக்களமாகவே இருந்து வருகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT