Last Updated : 20 Mar, 2020 11:45 AM

7  

Published : 20 Mar 2020 11:45 AM
Last Updated : 20 Mar 2020 11:45 AM

திக்...திக்.. கடைசி நிமிடங்கள்; தூக்கமில்லா இரவுகள்: கடைசி ஆசையைச் சொல்லாமல் சென்ற நிர்பயா குற்றவாளிகள் - சிறைக்குள் நடந்தது என்ன?

நிர்பயா வழக்கு குற்ரவாளிகள்

புதுடெல்லி

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தாங்கள் எந்த நேரமும் காப்பாற்றப்படுவோம் என்ற நினைப்பில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய நால்வரும் நேற்று இரவு முழுவதும் தூக்கமில்லாமல் தவித்துள்ளனர் என்று திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அக்சய் தாக்கூர், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் உதவவில்லை. 3 முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அதில் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிய 4 பேரும், 4-வது டெத் வாரண்ட்டில் மரணத்தில் பிடியில் சிக்கினார்கள்.

நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு திஹார் சிறையில் ஒரே நேரத்தில் 4 குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.

திஹார் சிறையில் முதன்முதலாக 4 குற்றவாளிகளும் ஒரே நேரத்தில் இப்போதுதான் தூக்கிலிடப்பட்டார்கள். இதற்கு முன் கடந்த 1983-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி மும்பையில் உள்ள எர்ரவாடா சிறையில் ராஜேந்திர ஜக்கால், திலிப் சுத்தார், சாந்தாராம் ஜக்தப், முனாவர் ஷா ஆகியோருக்கு கொலை வழக்கில் ஒரேநேரத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திஹாரில் 4 குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுதான் முதல் முறையாகும்

திஹார் சிறையில் நேற்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்து சிறை வட்டாரங்களில் இருந்தவர்கள் கூறியதாவது:

''தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது எனத் தெரிந்தவுடன் குற்றவாளிகள் 4 பேரும் பதற்றத்துடன் காணப்பட்டனர். இரவு முழுவதும் தூங்கவில்லை. 4 குற்றவாளிகளும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அதற்குச் சிறை கண்காணிப்பாளர் மறுத்துவிட்டார்.

மீரட் நகரில் இருந்து வந்திருந்த ஹேங்மேன் பவான் ஜலாத் நள்ளிரவு 12 மணிக்குத் தூக்கிலிடப்போகும் 4 பேரின் முகத்தையும் பார்க்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை குற்றவாளிகள் இருக்கும் சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பின்னர், பவான் ஜலாத்திடம் அவர்களைக் காண்பித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் தங்களின் மனு விசாரிக்கப்படுவதால், கடைசி நேரத்தில் தூக்கு தண்டனை ரத்தாகும் என்ற நம்பிக்கையில் 4 பேரும் தூங்காமல் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

ஆனால், அதிகாலை 3.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறுத்தமுடியாது என்று தெரிவித்த செய்தி கிடைத்தவுடன் 4 குற்றவாளிகளும் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினர்.

உடனடியாக தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்யத் தொடங்கினர். சிறைக்கு வெளியே துணை ராணுவப் படை பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டது.

  • அதிகாலை 4 மணிக்கு சிறை வார்டன் வந்து, குற்றவாளிகள் 4 பேரையும் கடைசியாகக் குளித்துவிட்டு தயாராகுங்கள் என்றார்.
  • 4.15 மணிக்கு 4 பேரும் குளித்துவிட்டு வந்தபின், தங்களுக்குப் பிடித்த மதத்தின் அடிப்படையில் வணங்கவும், ஏதாவது படிக்கவும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின் கடைசியாகச் சாப்பிடுவதற்கு உணவு வழங்கப்பட்டது.
  • 4.30 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரிடமும் சிறை வளாகத்தில் விருப்பமான தொலைவு வரை கடைசியாக நடக்கவும், ஓடவும் அனுமதியளிக்கப்பட்டது. 4 பேரும் நீண்ட தொலைவு நடந்து சென்று திரும்பினர்.
  • குற்றவாளிகள் 4 பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று மருத்துவர் சான்றளித்தார். அதன்பின் அந்தக் கடிதத்தை சிறைக் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
  • அதிகாலை 5.20 மணிக்கு கருப்பு நிறத்தில் ஒரு துணி கொண்டு 4 பேரின் முகங்களும் மூடப்பட்டன. கைகள் கட்டப்பட்டு, அவர்கள் 4 பேரும் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாவட்ட ஆட்சியர், மருத்துவ ஆய்வாளர், சிறை கண்காணிப்பாளர் உள்பட 10 பேர் இருந்தனர்.
    சிறையிலிருந்து 4 பேரின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்குக் கொண்டு செல்லப்படும் காட்சி.
  • அதிகாலை 5.25 மணிக்கு ஏற்கெனவே போட்டிருக்கும் கருப்புத் துணி மீது மற்றொரு பருத்தித் துணி கொண்டு மூடப்பட்டது. அப்போது உங்களின் கடைசி ஆசை என்ன என்று அதிகாரிகள் 4 பேரிடமும் கேட்டனர்.
  • ஆனால், அவர்கள் தங்களின் கடைசி ஆசை என்னவென்று கடைசி வரை சொல்லவில்லை. மாவட்ட ஆட்சியர் பிளாக் வாரண்ட்டில் கையொப்பம் இட்டார். அதன் பின் 4 பேரின் கால்களையும் ஹேங்மேன் பவான் ஜலாத் இறுக்கமாகக் கட்டினார்.
  • சரியாக 5.30 மணி ஆனவுடன் சிறையின் கண்காணிப்பாளர் சைகை செய்தவுடன் ஹேங் மேன் பவான் ஜலாத் லிவரை இழுத்தவுடன் 4 பேர் நின்றிருந்த பலகை விலகி தூக்கில் தொங்கி, மரணத்தைத் தொட்டனர். அதன்பின் 30 நிமிடங்கள் வரை தூக்கில் தொங்கிய 4 பேரின் உடல்கள் இறக்கப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டன. அதில் 4 பேரின் உயிர் பிரிந்துவிட்டது என்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதி செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x