Last Updated : 19 Mar, 2020 03:56 PM

 

Published : 19 Mar 2020 03:56 PM
Last Updated : 19 Mar 2020 03:56 PM

கரோனா வைரஸ் அச்சுறுத்தல்; மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி: முழு விவரம் என்ன?

கோப்புப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். மற்ற ஊழியர்கள் 3 விதமான நேரங்களில் பணிக்கு வரலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் ஒரே வார்த்தையாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலும் கரோனாவின் தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளார்கள். 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் 169 ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

  • " மத்திய அரசில் உள்ள அனைத்து துறைகளிலும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் நாள்தோறும் பணிக்கு வந்தால் போதும் என்பதை அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மீதமுள்ள 50 சதவீதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளைக் கவனிக்கலாம்.
  • ஒவ்வொரு துறையின் தலைவர்கள் வாரந்தோறும் குரூப் பி, சி ஊழியர்கள் யாரெல்லாம் அலுவலகத்துக்கு வந்து பணி செய்ய வேண்டும், யாரெல்லாம் வீட்டிலிருந்தவாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த பணிக் குறிப்பேட்டைத் தயாரிக்க வேண்டும்.
  • மேலும் அலுவலகத்துக்கு அருகே வீடுகள் அமைந்திருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் பணிக்கு வருமாறு துறையின் தலைவர்கள் உத்தரவிட வேண்டும்.
  • அனைத்து ஊழியர்களுக்கும் பணி நேரம் என்பது ஒரே நேரமாக இல்லாமல் மூன்று வகையாகப் பிரித்து பணியாற்றச்சொல்லலாம். காலை 9 மணி முதல் 5.30 மணி வரையிலும், காலை 9.30 மணி முதல் 6 மணி வரையிலும், காலை 10 மணி முதல் 6.30 மணி வரையிலும் மூன்று வகையான நேரங்களில் பணியாளர்களை பணிக்கு வருமாறு கோரலாம்.
  • வீடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களின் மேலதிகாரி உத்தரவுப்படி தொலைப்பேசி அல்லது மின்னணு தகவல்தொடர்பு மூலம் எப்போது கூப்பிட்டாலும் அதற்கு பதில் அளிக்க வேண்டும். ஏதாவது அவசரமான பணியாக இருப்பின் அலுவலகத்துக்கு வரவேண்டும்.
  • இந்த விதிமுறைகள் அனைத்தும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பணியில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இருககும் அத்தியாவசிய, அவசர சேவை துறைகளில் இருக்கும் ஊழியர்களுக்குப் பொருந்தாது.
  • நிதித்துறை சேவைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றும் இந்த விதிமுறை பொருந்தும். மேலும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும், துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • மத்திய அரசு அலுவலகத்துக்குள் பொது மக்கள், பார்வையாளர்கள் வருவதைக் குறைக்க வேண்டும். தற்காலிகமாக பார்வையாளர்களுக்கு பாஸ் வழங்குவது உடனடியாக நிறுத்தப்படுகிறது. முக்கியமான அதிகாரியை யாரேனும் சந்திக்க விரும்பினால் முறையான அனுமதி பெற்று, சோதனை செய்தபின்புதான் அனுமதிக்க வேண்டும்.
  • அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர்களை கண்டிப்பாக பொறுத்த வேண்டும், வாயில் பகுதிகளில் கைகளை சுத்தம் செய்யும் திரவத்தை வைத்திருக்க வேண்டும்.
  • ஊழியர்கள் யாருக்கேனும் கரோனா வைரஸ் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பவோ அல்லது தனிமைப்படுத்தவோ செய்ய வேண்டும்.
  • உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டத்தை நேரடியாக நடத்துவதைத் தவிர்த்து அனைத்தையும் கானொலிக் காட்சி மூலம் நடத்த முயல வேண்டும். அனைத்து ஊழியர்களும் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். கோப்புகள்,முக்கிய ஆவணங்கள் தொடர்பானவற்றை பெரும்பாலும் மின்னஞ்சல் மூலமாகவே அனுப்ப வேண்டும்.
  • மத்திய அரசு அலுவலகத்தில் இயங்கும் அனைத்து ஜிம்கள், மனமகிழ்மன்றம், குழந்தைகள் காப்பகம் அனைத்தையும் மூட வேண்டும்
  • பணியிடங்களில் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பாதுகாப்பு வசதிகள், சுத்திகரிப்பான்கள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
  • ஊழியர்கள் யாரேனும் உடல்நலக்குறைவால் சுயதனிமைக்கு செல்ல விரும்பினால் அவர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்.
  • கரோனா வைரஸாஸ் அதிகமான பாதிப்புக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படும் வயதான ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்கள், தொடர்ந்து சிகிச்சை எடுத்துவரும் ஊழியர்கள் ஆகியோர் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த வகை ஊழியர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து மக்களுடன் நேரடியாக தொடர்பில் இல்லாதவாறு உயர் அதிகாரிகள் கவனிக்க வேண்டும்

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x