Published : 19 Mar 2020 08:49 AM
Last Updated : 19 Mar 2020 08:49 AM

கரோனா வைரஸை கட்டுப்படுத்த தனியார் மருத்துவமனைகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- படுக்கை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அழைப்பு

புதுடெல்லி

‘‘கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

கரோனா வைரஸால் இந்தியாவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், வைரஸ் பாதிப்பை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் அடுத்தகட்டமாக தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு மையங்களுக்கு மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சில வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:

வைரஸ் பாதிப்பை தடுக்க தனியார் மருத்துவமனைகளும் ஆய்வு மையங்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அதற்காக வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

வைரஸ் பரவாமல் தடுக்க தனியார் ஆய்வு மையங்களைச் சேர்ந்தவர்கள், வீடுகளுக்கே சென்றுரத்த மாதிரியைச் சேகரிக்க வேண்டும்.

வைரஸ் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கும் வகையில் முழுபாதுகாப்பு அம்சங்களுடன் ரத்துமாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். ஆய்வு மையங்களில் ‘கோவிட்-19’ பாதிப்பைக் கண்டறிவதற்கு தனிப் பிரிவு அல்லது இடம் ஒதுக்க வேண்டும். இதுபோன்ற வசதிகள் ஏற்படுத்திய பிறகு அடுத்த வாரம் முதல் வைரஸ் பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்ளலாம்.

வைரஸ் பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளை தனியார் ஆய்வு மையங்கள் இலவசமாக செய்து தரவேண்டும்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் டைரக்டர் ஜெனரல் பல்ராம் பார்கவா நேற்று கூறியதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வு மையங்களின் ஆதரவு தற்போது நாட்டுக்குஅவசியம் தேவை. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தனியார் மருத்துவமனைகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மேலும், தனி வார்டு அமைக்கதனியார் மருத்துவமனைகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். வைரஸை தடுக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்க பல தனியார் மருத்துவமனைகள் ஆர்வம் காட்டி உள்ளன.

இவ்வாறு பார்கவா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x