Last Updated : 18 Mar, 2020 10:01 PM

 

Published : 18 Mar 2020 10:01 PM
Last Updated : 18 Mar 2020 10:01 PM

கரோனா வைரஸால் பள்ளிகள் மூடப்பட்டாலும் குழந்தைகளுக்கு மதிய உணவை மறுக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி

கரோனா வைரஸால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள சூழலில் அதைக் காரணமாக வைத்து, பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதை மறுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் முழுமையான ஒருங்கிணைந்த கொள்கையை உருவாக்க வேண்டும் எனக் கோரி மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் தீவிரத்தைத் தடுக்கும் வகையில் மத்திய அரசும், மாநில அரசுகளும் அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க உத்தரவிட்டது. பள்ளிகளுக்கும், அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை விட்டதன் காரணமாகப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் இன்று தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.காவே, சூர்யகாந்த் ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறுகையில், "கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கும், அங்கன்வாடிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதிய உணவுக்காகக் காத்திருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு கிடைக்காத சூழல் இருக்கிறது. பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், குழந்தைகளுக்கு உணவு வழங்குவதை மறுக்கக் கூடாது.

ஒரு பிரச்சினையைத் தீர்க்க முயன்று அது மற்றொரு பிரச்சினையை உருவாக்கிவிடக்கூடாது. அங்கன்வாடி மூடப்படுவதால், பாலூட்டும் தாய்மார்களுக்குச் சத்தான உணவு கிடைக்காமல் போகக்கூடும். பள்ளிகள், அங்கன்வாடிகள் மூடப்பட்டாலும், குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு கிடைப்பதிலும், தாய்மார்களுக்கு உணவு கிடைப்பதிலும் எந்தவிதமான பாதிப்பும் வரக்கூடாது.

குறிப்பாக கிராமங்கள், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இருக்கும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் இந்த முடிவால் பாதிக்கப்படக்கூடாது. அவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்போது அவர்கள் எளிதில் நோய்வாய்ப்படக்கூடும்.

ஆதலால், கரோனா வைரஸைத் தடுக்கும் நடவடிக்கை எடுப்பதோடு, குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துள்ள சரிவிகித உணவு கிடைப்பதில் எந்தவிதமான தடையும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் விதத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஒரே சீரான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் அமைச்சக்தின் செயலாளர், அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகள் ஆகியோர் ஒரு வாரத்துக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஆர் ஹெக்டே நியமிக்கப்படுகிறார். இந்த வழக்கு மீண்டும் வரும் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x