Published : 18 Mar 2020 09:30 PM
Last Updated : 18 Mar 2020 09:30 PM
கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ரயில் பயணத்துக்கு டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகளில் 60 சதவீதம் பேர் தங்கள் டிக்கெட்டை மார்ச் மாதத்தில் ரத்து செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தகவலைப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துக்கான நாடாளுமன்றக் குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
ரயில்வேயில் பயணிகளுக்குப் போதுமான அளவு பாதுகாப்பு வசதிகளைச் செய்யவில்லை. கரோனா வைரஸிருந்து பாதுகாக்கும் வழிமுறைகளை, விழிப்புணர்வு செய்யவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போதுமான அளவு எடுக்கவில்லை என்று ரயில்வே வாரியத் தலைவர் வி.கே.யாதவை நாடாளுமன்றக் குழு கடுமையாக விமர்சித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் இதுவரை கரோனா வைரஸால் 3 பேர் உயிரிழந்துள்ளதால், ரயில் பயணிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து விரைவில் தெரிவிக்க ரயில்வே வாரியத் தலைவர், அதிகாரிகளுக்கு நாடாளுமன்றக் குழு உத்தரவிட்டுள்ளது.
ரயில்வே வாரியத் தலைவர் இதுபோன்ற முக்கியமான, பதற்றமான நேரத்தில் எந்தவிதமான முன்னேற்பாடுகளும் இல்லாமல் இருக்கிறார் என்று நாடாளுமன்றக் குழு காட்டமாகத் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 20 எம்.பி.க்கள் வரை நாடாளுமன்றக் குழுவில் இருக்கின்றனர். அனைவரும் ரயில்வே வாரியத் தலைவரின் மெத்தனத்தைக் கேள்விகளால் துளைத்து வாட்டி எடுத்துள்ளார்கள்.
ஒரு எம்.பி. பேசுகையில், "விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத்துறை சில திட்டங்கள் குறித்து விளக்கப் படங்கள் கொண்டு வந்துள்ளார்கள். ரயில்வே தலைவர் ஏதும் கொண்டு வரவில்லை. சில காகிதங்களை மட்டும் கொண்டு வந்துள்ளார். இது ஒரு மோசமான மனநிலை. பயணிகளின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரைவில் அறிக்கை அளிக்க வேண்டும். எதைச் செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்துத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். சிறு துண்டுப் பிரசுரங்கள், விளக்கப் பதாகைகள், ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்புகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே துறை அனுப்பிய சுற்றறிக்கையில், ''பயணிகள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். நடைபாதையில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். பெட்டிகளில் சுத்திகரிப்பான் வைக்க வேண்டும். உணவு வழங்கும் ஊழியர்கள் சுகாதாரத்துடன் இருத்தல் வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT