Published : 18 Mar 2020 08:18 PM
Last Updated : 18 Mar 2020 08:18 PM
2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரில் மூவர் தங்களின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் அந்த மனுவை ஏற்று டெல்லி நீதிமன்றம் திஹார் சிறை நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
குற்றவாளிகள் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்சய் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை வரும் 20-ம் தேதி காலை 5.30 மணிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஏற்கெனவே இரு முறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அது தள்ளிப்போடப்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேருக்கும் அனைத்துச் சட்ட வாய்ப்புகளும் முடிந்தநிலையில்தான் டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் குற்றவாளிகள் 2 வது முறையாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
குற்றவாளி அக்சய் சிங் நேற்று குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்துள்ளார். குற்றவாளி பவன் குப்தா குற்றம் நடந்தபோதுதான் மைனராக இருந்தேன் என்று தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. மேலும், பவன் குப்தாவும் இதே காரணத்தைக் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த சூழலில் குற்றவாளிகள் சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சிங் குற்றவாளிகள் மூவர் சார்பில் இன்று டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், ''அக்சய் சிங், பவன் குப்தா ஆகியோரின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருக்கின்றன. ஆதலால், தண்டனையை நிறுத்தி வைக்க அக்சய் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் சார்பில் மனுத் தாக்கல் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா, திஹார் சிறை நிர்வாகம் நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT