Published : 18 Mar 2020 06:02 PM
Last Updated : 18 Mar 2020 06:02 PM
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் தாமதமாவது ஏன் என்று கனிமொழி எம்.பி. எழுத்துபூர்வமாகக் கேட்டார். இதற்கு மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்தார்.
''ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கடந்த மூன்றாண்டுகளில் 21% மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. அப்படியானால் நிதியைக் குறைவாகப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் என்ன? நாட்டில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை அமைப்பது என்பதை நோக்கித்தான் அரசு செல்கிறதா? இல்லை வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா?'' என்று மக்களவை திமுக குழு துணைத் தலைவரான கனிமொழி எம்.பி. மக்களவையில் எழுத்துபூர்வமாகக் கேட்டார்.
இதற்கு மத்திய நகர்ப்புற வீட்டு வசதித் துறையின் தனிப்பொறுப்பு இணை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இன்று அளித்துள்ள பதிலில், “இந்தியாவிலுள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்றும் பொருட்டு மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு ஸ்மார்ட் சிட்டி மிஷன் என்ற திட்டத்தைத் தொடங்கியது. இதன்படி மொத்தம் 5,151 பணிகளுக்கு ரூ.2,05,018 கோடி ரூபாய் திட்ட மதிப்பு முன்மொழியப்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மத்திய அரசு மொத்தம் 48 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்குகிறது. 100 நகரங்களுக்கும் சராசரியாக 500 கோடி ரூபாய் இதன்படி ஒதுக்கப்படுகிறது. இதேபோன்றதொரு பங்கு மாநில அரசுகளும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட வேண்டும். மீதி தேவைப்படும் நிதி பொதுத்துறை-தனியார் நிறுவனங்களின் பங்களிப்புகள், கடன் போன்றவற்றின் மூலம் திரட்டப்படும்.
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டில் இருந்து 2020 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை 18 ஆயிரத்து 810 கோடியே 10 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 5,151 திட்டங்களில், இதுவரை 4,500 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு 1,63,844 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் 1,22,123 கோடி ரூபாய் மதிப்புள்ள 3,600 க்கும் அதிகமான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரூ. 25,926 கோடி மதிப்புள்ள 1,587 திட்டங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நகரங்கள், அத்திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து 5 வருடங்களுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மதிப்பிடுகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் திருப்திகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT