Published : 18 Mar 2020 05:20 PM
Last Updated : 18 Mar 2020 05:20 PM
ஈரானில் சிக்கியிருந்த 205 இந்தியர்கள் பாதுகாப்பாக விமானம் மூலம் இன்று டெல்லி வந்து சேர்ந்தனர். அவர்கள் ஜெய்சல்மாரில் உள்ள முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஷியா முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இந்திய யாத்திரிகர்கள் புனிதப் பயணமாக ஈரான் சென்றிருந்தார்கள். கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படிப்படியாக அங்குத் தவிக்கும் இந்தியர்கள் மீட்டு இந்தியா அழைத்து வரப்பட்டு வருகின்றனர்.
மஹான் ஏர்லைன் மூலம் 205 இந்தியர்கள் இன்று இந்தியா அழைத்துவரப்பட்டனர். இவர்கள் அனைவரும் லடாக், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் ஈரானில் இருந்து 591 பேர் இந்தியா வந்துள்ளனர். அதேசமயம், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 255 இந்தியர்களுக்கு ஈரானில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியா திரும்பிய 205 இந்தியர்களில் 115 ஆண்கள், 85 பெண்கள், 4 குழந்தைகள் மற்றும் சில என்ஆர்ஐ மக்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜெய்சல்மாரில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு 14 நாட்களுக்குப்பின் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
ஈரானில் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு மருத்துவச் சிகிச்சையளிக்க இந்திய மருத்துவக் குழுவினர் சென்றுள்ளனர்.
வெளிநாடுகளில் மொத்தம் 276 இந்தியர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் ஈரானில் மட்டும் 255 பேர் இருக்கிறார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் மொத்தம் 276 இந்தியர்கள் கரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் ஈரானில் மட்டும் 255 இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 இந்தியர்களும், ஹாங்காங், குவைத், ரவாண்டா, இலங்கையில் தலா ஒரு இந்தியரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT