Published : 18 Mar 2020 04:35 PM
Last Updated : 18 Mar 2020 04:35 PM
மத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவர் சிவராஜ் சிங் சவுகான் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நாளைக்கு (18.03.2020) உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 அமைச்சர்கள் உட்பட 22 எம்எல்ஏ-க்கள் கடந்த வாரம் பதவி விலகினர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக பாஜக கூறி வருகிறது.
இதனிடையே, ஆளுநர் லால்ஜி டாண்டன் 14-ம் தேதி முதல்வர் கமல்நாத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், “சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் 16-ம் தேதி தொடங்கும். அன்றைய தினம் எனது உரை முடிந்ததும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இதன்படி, நேற்று முன்தினம் சட்டப்பேரவை கூடியது. ஆனால், நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது பற்றி குறிப்பிடப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர், தனது உரையை முழுமையாக வாசிக்காமல், ஒரு பகுதியை மட்டும் வாசித்துவிட்டு வெளியேறினார். பின்னர் கோவிட்-19 காய்ச்சல் காரணமாக அவையை 26-ம் தேதி வரைஒத்தி வைப்பதாக பேரவைத் தலைவர் என்.பி.பிரஜாபதி அறிவித்தார்.
இதையடுத்து, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சட்டபேரவை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் மனு தாக்கல்செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய பிரதேச அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்கவி மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக அடைத்து வைத்துள்ளதாகவும், ஜனநாயகப் படுகொலை நடப்பதாகவும் கூறினார்.
பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ம.பி.யில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைய தினத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT