Published : 18 Mar 2020 09:11 AM
Last Updated : 18 Mar 2020 09:11 AM
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கின் 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் அக்ஷய் குமார் சிங் என்ற தூக்குத் தண்டனை கைதியின் மனைவி, ‘தான் விதவையாக வாழ விரும்பவில்லை, எனவே தூக்கிற்கு முன் விவாகரத்து பெற்றுக் கொடுங்கள்’ என்று பிஹார் அவுரங்காபாத் உள்ளூர் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.
மார்ச் 20ம் தேதி நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் கணவன் சாவுக்குப் பிறகு தான் விதவை என்ற பெயருடன் வாழ விரும்பவில்லை எனவே தூக்குத் தண்டனைக்கு முன்பே அக்ஷய் குமார் சிங்கிடமிருந்து தனக்கு விவாகரத்து வாங்கித் தருமாறு கோர்ட்டில் அவர் மனைவி மனு செய்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் மார்ச் 19ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
அக்ஷய் குமார் சிங் மனைவி புனிதா கூறும்போது, “என் கணவர் அப்பாவி. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக சட்ட ரீதியாக விவாகரத்து கோரியுள்ளேன்” என்றார்.
புனிதாவின் வழக்கறிஞர் கூறும்போது, ‘கணவர் மீது பலாத்காரம், மனிதவிரோதக் கொலைக் குற்றச்சாட்டுகள் இருப்பதால் மனைவி விவாகரத்து பெற உரிமையுள்ளது” என்றார்.
நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல வழிகளில் தூக்குத் தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
ஆனால் சட்ட நிபுணர்கள் கூறுவதென்னவெனில் அனைத்து சட்ட நடைமுறைகளும் அவர்களைப் பொறுத்தவரை முடிந்து விட்டன. ஆகவே இனியும் தாமதம் சாத்தியமில்லை என்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT