Published : 17 Mar 2020 07:32 PM
Last Updated : 17 Mar 2020 07:32 PM
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான கண்காணிப்புக்குழு கூட்டங்கள் கடந்த 3 வருடங்களாக தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் நடைபெறவில்லை என சமூக நீதி மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெல்லோட் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சித் தகவல் விழுப்புரம் தொகுதி எம்.பி.யான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கான பதிலில் வெளியாகியுள்ளது.
மக்களவையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் எம்.பி.யுமான டி.ரவிக்குமார் சமூக நீதி மற்றும் மறுவாழ்வுத் துறை சம்பந்தப்பட்ட ஒரு கேள்வியை எழுப்பினார். அதில் அவர், எஸ்சி, எஸ்டி மீதான வன்கொடுமை தடுப்பு குறித்து பிரிவு 16 மற்றும் 17-ன் கீழ் முதல்வர் மற்றும் மாவட்ட முதன்மை நிர்வாகிகள் தலைமையிலான கூட்டங்கள், கடந்த 3 வருடங்களில் நடைபெற்றதன் எண்ணிக்கையைக் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய சமூக நீதி மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் சார்பில் மக்களவை முன் ஒரு அறிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. அதில், ஓரிரு மாநிலங்களில் மட்டும் ஒருசில கூட்டங்கள் நடைபெற்றுள்ளன என்றும், தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் எந்தக் கூட்டமும் நடைபெறவில்லை எனவும் தகவல் அளிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து திமுக எம்.பி.க்களின் குழுவின் துணைத் தலைவரான கனிமொழி எம்.பி., மத்திய அமைச்சரின் பதிலைக் கண்டு தான் வருத்தமும் அதிர்ச்சியும் அடைந்ததாகவும், இந்தக் கூட்டங்களை நடத்தாமைக்கு மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் துணைக் கேள்வி எழுப்பினார்.
இதற்கான பதிலில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெல்லோட் மக்களவையில் கூறும்போது, ''ஏற்கெனவே அளித்த பதிலின்படி முதல்வர் தலைமையிலான கூட்டங்கள் மிகவும் குறைவு. ஆனால், மாவட்டத் தலைமை நிர்வாகியால் பல கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
இக்கூட்டங்களை தாலுகா அளவிலும் நடத்திச் செல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்த பெருமை எங்கள் அரசை சாரும். ஏனெனில், 1989 ஆம் ஆண்டில் இந்தச் சட்டத்தில் 2015க்குள் முதன்முறையாக திருத்தம் செய்து அதிக வலுவாக்கியது.
இச்சமுதாயத்தினர் மீது கொடுமைப்படுத்தி குற்றம் புரியும் நபர் எவரும் தப்பிச் செல்லாதபடி மீண்டும் 2018-ல் ஒருமுறை திருத்தம் செய்தோம். இதுபோல், பல கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்'' எனத் தெரிவித்தார்.
இதனிடையே, சமுக நீதி வழங்குவதில் பெருமைக்குரிய மாநிலமான தமிழகத்தில் அதன் முதல்வர் தலைமையில் ஒரு கூட்டமும் நடைபெறவில்லை என்பது வெட்கத்திற்கு உரியது எனவும் கனிமொழி குறிப்பிட்டார். இதைக் கேட்டு மக்களவையில் இருந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ‘வெட்கம், வெட்கம்’ எனக் குரல் எழுப்பினர்.
மத்திய அமைச்சரின் அறிக்கையில், ''ஹரியாணாவில் மட்டுமே எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புக் கூட்டங்கள் கடைசி இரண்டு வருடங்களில் தலா 2 கூட்டங்களும், கடந்த வருடம் ஒரு கூட்டமும், மேற்கு வங்க மாநிலத்தில் தலா ஒரு கூட்டமும், கடந்த வருடம் 2 கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. குஜராத், சண்டிகர், புதுச்சேரி, சத்தீஸ்கர், கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகியவற்றில் ஓரிரு கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றன'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT