Published : 17 Mar 2020 03:29 PM
Last Updated : 17 Mar 2020 03:29 PM
மக்களவையில் என்னைப் பேசவிடாமல் என்னுடைய உரிமைகளைப் பறிக்கலாம், ஆனால், தமிழக எம்.பிக்களை பேசவிடாமல், தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, திமுக, காங்கிரஸ், என்சிபி எம்.பி.க்கள் மாநில மொழிகள் குறித்த துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அதற்குச் சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதிக்கவில்லை.
ஆனால், உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மட்டும் பேசினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக, காங்கிரஸ், என்சிபி எம்.பி.க்கள் வெளிநடப்புச் செய்தனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், " கரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மட்டும் இந்தியா தயாராக இருக்க வேண்டியது மட்டுமல்ல, அடுத்துவரும் பொருளாதார பேரழிவையும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடுத்த 6 மாதங்கள் நமது நாட்டு மக்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய வேதனையை எதிர்கொள்ளப் போகிறார்கள்.
உலக நாடுகளின் பொருளாதார தர மதிப்பீடு செய்யும் நிறுவனங்களான மூடிஸ், எஸ் அன்ட் பி ஆகியவை என்ன மதிப்பீடு செய்யும், அதிபர் ட்ரம்ப் என்ன நினைப்பார், சொல்வார் என்றுதான் பிரதமர் மோடி கவலைப்படுகிறார்.
இதுபோன்ற போலியான கவலைகளில் இருந்து பிரதமர் மோடி முதலில் வெளிவர வேண்டும். அவர்கள் என்ன சொல்கிறார்கள், மதிப்பீடு செய்கிறார்கள் என்று கவலைப்படுவதை விடுத்து, பொருளாதார வளர்ச்சிக்காக ஏதாவது செய்யவேண்டும். ஆனால், பிரதமர் மோடி தனது தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டால், பிரச்சினையை புரிந்து கொள்ளும் விருப்பம் இல்லை என்றுதான் அர்த்தம்.
பெட்ரோலியக் கச்சா எண்ணெய் விலை குறைவின் பலனை மத்திய அரசு மக்களுக்கு வழங்கிட வேண்டும்.
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மக்களவையில் தமிழ் மொழியில் துணைக் கேள்விகள் கேட்க முயன்றபோது அவர்களுக்கு அனுமதி வழங்காமல் சபாநாயகர் செயல்பட்டது தமிழக மக்களை அவமானப்படுத்தியது போன்றதாகும். இது தனிப்பட்ட மனிதரான எனக்கு மட்டும் நேர்ந்த பிரச்சினை அல்ல.தமிழக மக்களுக்கான பிரச்சினை, அவர்களின் மொழி சார்ந்த பிரச்சினை, அவர்களின் தாய்மொழியில் பேச அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமானப்படுத்தியதாகும்.
தமிழK மக்கள் தங்களின் உரிமையைப் பாதுகாக்கவும், நம்பவும், பேசவும் உரிமை இருக்கிறது. என்னுடைய உரிமைகளை நீங்கள் பறிக்கலாம், ஆனால், தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்க முடியாது, தமிழக எம்.பி.க்களை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும். ஆனால், தமிழக எம்.பி.க்களை தமிழ் மொழியில் துணைக் கேள்விகளை கேட்க அனுமதிக்காமல் அவர்களின் உரிமைகளை சபாநாயகர் ஓம்.பிர்லா பறித்துவிட்டார். இந்த சபை அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கும், மாநிலங்களுக்கும் இடமளிக்கும் இடமாகும். இங்கு விவாதங்கள், ஆலோசனைகள் நடக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக விவாதங்கள் நடப்பதில்லை. கேள்வி கேட்கக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT