Last Updated : 17 Mar, 2020 02:50 PM

5  

Published : 17 Mar 2020 02:50 PM
Last Updated : 17 Mar 2020 02:50 PM

ஜேட்லியின் அறிவுரைகளை பிரதமர் மோடி கேட்கவில்லையா: ரஞ்சன் கோகய் எம்.பி. நியமனம் குறித்து காங். விமர்சனம்

பிரதமர் மோடி, மறைந்த பாஜக தலைவர் அருண் ஜேட்லி : கோப்புப்படம்

புதுடெல்லி

மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் அறிவுரைகள் பிரதமர் மோடிக்கு நினைவில்லையா என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகய் 13 மாதங்கள் பணியில் இருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று 4 மாதங்களில் மாநிலங்களவை எம்.பியாக நேற்று நியமிக்கப்பட்டார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கோகய் அவரின் அந்தஸ்துக்கு குறைவான எம்.பி.யாக நியமிக்கப்படுகிறார். இதுபோல் நடப்பது புதிதல்ல. இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா ஓய்வு பெற்ற பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் ஓய்வுக்குப் பின், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின் போது நீதிபதிகளை ஓய்வு பெற்றவுடனே ஆளும் கட்சியினர் அவர்களுக்குப் பதவிகளை வழங்கக்கூடாது என்று பாஜக மூத்த தலைவரும் மறைந்த அருண் ஜேட்லி வலியுறுத்தி இருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி மறைந்த பாஜக மூத்த தலைவரும் சட்டத்துறை அமைச்சருமான அருண் ஜேட்லி பாஜகவின் சட்டத்துறை பிரிவு சார்பில் நடத்திய கூட்டத்தில் பேசுகையில், " இரு வகையான நீதிபதிகள் இருக்கிறார்கள். சட்டத்தை நன்கு அறிந்தவர்கள் ஒருவகை, மற்றொரு வகை சட்டத்துறை அமைச்சரை நன்கு அறிந்தவர்கள்.

உலகிலேயே நீதிபதிகளை நீதிபதிகள் நியமிக்கும் ஒரே நாடு இந்தியாதான். நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதில்கூட, அவர்கள் ஓய்வு பெற விரும்புவதில்லை. நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர்கள் வழங்கும் தீர்ப்புகள்தான், ஓய்வுக்குப்பின் அவர்களுக்குரிய பதவியைத் தீர்மானிக்கின்றன" எனத் தெரிவித்தார்

ரஞ்சன் கோகய் : கோப்புப்படம்

இதை கருத்தை அப்போதைய பாஜக தேசியத் தலைவர் நிதின் கட்கரியும் வலியுறுத்தினார். அவர் கூறுகையில், " நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் கண்டிப்பாக வேறு எந்த பதவியையும், அதாவது நீதிமன்ற ஆணையங்கள், தீர்ப்பாயங்களில் பணியாற்றக்கூடாது. 2 ஆண்டுகள் இடைவெளி வழங்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், ஆளும் அரசுகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நீதிபதிகளையும், நீதிமன்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். நம் நாட்டின் சுயமான, தன்னிச்சையான அமைப்பான நீதிமன்றத்தின் சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது" எனத் தெரிவித்திருந்தார்

இந்த சூழலில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், " மாநிலங்களவை எம்.பியாக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயை பரிந்துரைக்கும் முன் பிரதமர் மோடி, தனது உற்ற நண்பரும், மறைந்த பாஜக மூத்த தலைவுரம், சட்டத்துறை, நிதித்துறை அமைச்சராக இருந்த அருண் ஜேட்லியின் அறிவுரைகளை நினைத்துப் பார்த்தாரா?

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோக்கூர் சரியாக இதைக் குறிப்பிட்டார், உங்களின் கடைசிக் கொள்கைப்பிடிப்பும் சரிந்துவிட்டதா" எனத் தெரிவித்திருந்தார்

காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி ட்விட்டரில் கூறுகையில், " மோடிஜி, அமித் ஷாஜி முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறி கருத்துக்கள் நினைவில்லையா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x