Published : 17 Mar 2020 11:01 AM
Last Updated : 17 Mar 2020 11:01 AM
உலகிலேயே இன்று ஒரு வார்த்தை அனைவரையும் தெறித்து ஓடச்செய்கிறது என்றால் அது ‘கரோனா’ என்ற வார்த்தைதான். ஆனால் கேரளாவில் மூவட்டுப்புழா என்ற ஊரில் இந்த வார்த்தை ஒருவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே தெரிந்திருக்கிறது என்பது கேரளாவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள மூவட்டுப்புழா என்ற ஊர் ஒரு வணிக மையமாகும். இங்கு ‘கரோனா’ என்று தனது ஜவுளிக்கடைக்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே ஒருவர் பெயர் வைத்திருப்பது தற்போது சுவாரஸ்யமான பேசுபொருளாகியுள்ளதோடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போது இந்த ஜவுளிக் கடையின் உரிமையாளர் பரீத் என்பவர் ‘கரோனா பரீத்’ என்று அறியப்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக ‘கரோனா பரீத்’ கூறும்போது, “இப்போது நான் இங்கு மிகவும் பிரபலம். பலரும் என்னுடன், இந்தக் கடையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் என்னைப் பார்த்து புன்னகைத்து விட்டுச் செல்கின்றனர். என் கடை வழியாக வாகனங்களில் செல்வோர், காரில் செல்பவர்கள் தங்கள் தலையை வெளியில் நீட்டி கடையை ஒரு பார்வை பார்த்து விட்டே செல்கின்றனர்” என்றார்.
கரோனா டெக்ஸ்டைல்ஸ் கடையில் அனைத்து துணிமணிகளும் கிடைக்கின்றன, கடைக்குள் ஒரு தையலகமும் உள்ளது.
எப்படி இந்தப் பெயரை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு அவர், “நான் அகராதியைப் பார்த்தேன் அப்போது கரோனா என்ற இந்த வார்த்தை எனக்குப் பிடித்துப் போய்விட்டது, இன்று இந்த வார்த்தைப் பலரையும் அச்சுறுத்தி வருகிறது” என்ரார்
இப்போது தன் கடையில் கிருமி நாசினி தெளித்து தன் கடைக்கு வருபவர்கள் அனைவருக்கும் சானிடைசற் அளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT