Published : 16 Mar 2020 10:36 PM
Last Updated : 16 Mar 2020 10:36 PM
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மாநிலங்களவை எம்.பி.யாக பரிந்துரைசெய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 46-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சன் கோகய் 13 மாதங்கள் பணியில் இருந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று 4 மாதங்களில் மாநிலங்களவைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கோகய் அவரின் அந்தஸ்துக்கு குறைவான எம்.பி.யாக நியமிக்கப்படுகிறார். இதுபோல் நடப்பது புதிதல்ல. இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ரங்கநாத் மிஸ்ரா ஓய்வு பெற்ற பின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் ஓய்வுக்குப் பின், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதால் அவரின் நீதி பரிபாலனத்தின் திறமையை மதிக்கும் வகையில் இந்த நியமன எம்.பி. வழங்கப்படுகிறது.
ரஞ்சன் கோகய் தலைமை நீதிபதியாக இருந்தபோதுதான் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சர்ச்சையில் இருந்த அயோத்தி பாபர் மசூதி-ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கினார். சபரிமலையில் பெண்கள் நுழைய அனுமதிக்கலாம், அந்தரங்க உரிமை அடிப்படை உரிமை போன்ற முக்கியத் தீர்ப்புகளை வழங்கினார்.
அதேசமயம் தலைமை நீதிபதியாக இருந்தபோது, ரஞ்சன் கோகய் தனிப்பட்ட சர்ச்சைகளில் சிக்கினார். உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய ஒரு பெண் ஊழியர் அவர் மீது பாலியல் குற்றம் சுமத்தினார். பின்னர் அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
தனிப்பட்ட ரீதியில் சர்ச்சையில் சிக்கியபோதிலும், தன்னுடைய நீதி வழங்கும் பணியில் எந்தவிதத்திலும் ரஞ்சன் கோகய் சிக்கலை ஏற்படுத்தவில்லை.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 80-ன் கீழ் துணைப்பிரிவு (ஏ), பிரிவு (1) ஆகியவற்றின் கீழ் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பரிந்துரை செய்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT