Published : 16 Mar 2020 08:48 PM
Last Updated : 16 Mar 2020 08:48 PM
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருப்பவர்களை அடையாளம் காணும் வகையில் அவர்களின் இடது கையில் மாநில சுகாதாரத்துறையினர் முத்திரையிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 114 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 37 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை அடையாளம் காணும் வகையில் மகாராஷ்டிரா அரசு புதிய வழியை மேற்கொண்டு வருகிறது.
அதுகுறித்து மகாராஷ்டிரா சுகாதாரத்துறையினர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகள், நாடுகளில் இருந்து வரும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அவ்வாறு வீட்டில் தனிமைப்படுத்தப்படும் மக்களை அடையாளம் காணும் வகையில் அவர்களின் இடது கைகளில் அரசின் முத்திரை குத்தப்படும்.
மேலும், மக்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிக்க விரும்பினால், அரசு அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் மின்னஞ்சல் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்தும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு ஒருவாரத்தில் தீர்வு காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், "மகாராஷ்டிர மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் வரும் 31-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. பல்கலைக்கழகத் தேர்வுகளும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்துக் கல்வி நிலையங்களும் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்".
இவ்வாறு மகாராஷ்டிரா சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மும்பையில் மிகப் பிரபலமான சித்தி விநாயகர் கோயில் காலவரையின்றி மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அவுரங்காபாத் அருகே இருக்கும் அஜந்தா எல்லோரா குகைகள், ஓஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஜாபவானி கோயில் ஆகியவை மூடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT