Published : 16 Mar 2020 08:12 PM
Last Updated : 16 Mar 2020 08:12 PM
கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதையடுத்து, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு உதவி எண்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றிலும் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 6 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பு கருதி சிறப்பு உதவி மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராவேஷ் குமார் ட்விட்டரில் உதவி எண்களைப் பதிவிட்டுள்ளார். அதில், "மத்திய வெளியுறவுத்துறை சார்பில் இந்தியர்களுக்கு உதவி செய்ய கரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை: 1800118797 (கட்டணமில்லா எண்), +91- 11- 23012113, +91- 11- 23014104, +91- 11- 23017905,” எனத் தெரிவித்துள்ளார்
மேலும், ஃபேக்ஸ் எண், மின்னஞ்சல் முகவரியையும் ராவேஷ் குமார் பதிவிட்டுள்ளார். அதில், " +91- 011-23018158 என்ற ஃபேக்ஸ் எண்ணும், covid19@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது".
மற்றொரு ட்வீட்டில் ராவேஷ் குமார் கூறுகையில், "வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உதவுவதற்காகக் கூடுதல் செயலாளர் தாமு ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள 4-வது அதிகாரி தாமு ரவி ஆவார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்திய அரசு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் 24 மணிநேரமும் பணியாற்றி வருகின்றனர். அறிவிக்கப்பட்டுள்ள உதவி எண்களில் இந்தியர்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்துத் தேவையான உதவிகளை வழங்கும்.
அதேபோல மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் வழியாகவும் தொடர்புகொண்டு உதவி பெறலாம். எங்களின் அனைத்துப் பணிகளையும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இணையமைச்சர் ஹர்ஸவர்தன் கண்காணிப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT