Published : 16 Mar 2020 07:54 PM
Last Updated : 16 Mar 2020 07:54 PM
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை படிப்படியாக வாபஸ் பெறும் திட்டம் ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மக்களின் புழக்கத்திலிருந்து திரும்பப் பெறப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்திலிருந்து நீக்கும் திட்டம் ஏதும் இல்லை. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை மாற்றும் சிரமம் இருப்பதாக மக்கள் கருதினர்.
அதனால் அதிகமான அளவுக்கு ரூ.200, ரூ.500 ஏடிஎம் இயந்திரத்தில் வைக்க வங்கி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக இந்தியன் வங்கி, எஸ்பிஐ வங்கி அறிவிப்புகளை வெளியிட்டன. மற்ற வகையில் சந்தையில் இருக்கும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்கும்.
ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து, அரசு எடுக்கும் முடிவின் அடிப்படையில் மக்களின் புழக்கத்துக்கு ஏற்ப ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. தற்போது வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், ரூ.7.40 லட்சம் கோடி புழக்கத்தில் இருக்கின்றன.
மார்ச் 5-ம் தேதி வரை 19,624.77 மில்லியன் 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.96 லட்சம் கோடியாகும். 50 ரூபாய் நோட்டுகள் 8,556.84 மில்லியன் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதன் மதிப்பு ரூ 42 ஆயிரத்து 784.20 கோடியாகும். ரூ.20 நோட்டுகள் ரூ.16,619.60 கோடியும், ரூ.10 நோட்டுகள் ரூ.30 ஆயிரத்து510.79 கோடியும் புழக்கத்தில் உள்ளன''.
இவ்வாறு அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT