Published : 16 Mar 2020 05:36 PM
Last Updated : 16 Mar 2020 05:36 PM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற முறையில் சந்தேகத்திற்குரியவர்களாகக் கூறி காஷ்மீரைச் சேர்ந்த 2,157 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீநகரில் பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் இந்தியாவிலும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவிலும் கரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களின் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களும் முன்னெச்சரிக்கை காரணமாக தியேட்டர்கள், வணிக வளாகங்களை மூடி வருகின்றன.
காஷ்மீரில் ஏற்கெனவே யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளையும் பிற கல்வி நிறுவனங்களையும் அதிகாரிகள் மூடிவிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக கிளப்புகள் மற்றும் பொது உடற்பயிற்சிக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.
அண்மையில் சவுதி அரேபியாவுக்குச் சென்ற ஒருவர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், ஜம்மு-காஷ்மீரில் அதிகாரிகள் ஸ்ரீநகரில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை மூடுவதாக இன்று அறிவித்தனர்.
இதுகுறித்து ஸ்ரீநகர் துணை ஆணையர் ஷாஹித் இக்பால் சவுத்ரி ஒரு ட்வீட்டில் கூறுகையில், ''ஸ்ரீநகரில் உள்ள அனைத்து பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் மூடப்படுகின்றன. இது ஒரு முன்னெரிக்கை நடவடிக்கைதானே தவிர வேறெந்தக் காரணமும் இதற்கு இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் மக்கள் அளித்து வரும் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது' என்று தெரிவித்துள்ளார்.
அரசு செய்தித் தொடர்பாளர் ரோஹித் கன்சால் கூறியதாவது,
''சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். எனினும், அந்நபரின் நோய் உறுதிப்படுத்தலுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற முறையில் சந்தேகத்துக்குரிய நிலையில் காஷ்மீரைச் சேர்ந்த 2,157 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,829 பேர் வீட்டில் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர். 29 பேர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் உள்ளனர். 131 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.
101 பேரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் 87 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் இதுவரை நடந்த பரிசோதனைகளில் இரண்டு பேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12 பேரின் மருத்துவ அறிக்கைகள் வெளியிடுவது சற்று தாமதமாகி வருகிறது. இதுவரை மொத்தம் 168 பேர் தங்களது 28 நாள் கண்காணிப்புக் காலத்தை முடித்துள்ளனர்''.
இவ்வாறு ரோஹித் கன்சால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT