Published : 16 Mar 2020 02:25 PM
Last Updated : 16 Mar 2020 02:25 PM
நாட்டின் அதி தீவிரப் பிரச்சினையாகியுள்ளது கரோனா வைரஸ். மாநிலங்களவையின் இன்றைய காலை அமர்வில் கரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் கூறப்பட்டன. ரயில், விமானப் பயணங்களைத் தவிர்ப்பதற்காக பொதுமக்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்து வருவதால் அதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டாமென சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சீனாவில் உருவாகி உலக நாடுகளை உலுக்கி வரும் கரோனா இந்தியாவையும் தற்போது விட்டுவைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மாநிலங்களும் முழுவீச்சில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனால் பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்துகள் மெல்ல மெல்ல ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், மால்கள் மூடப்பட்டு வரும் நிலையில் இன்று காலை தொடங்கிய அமர்வு பெரும்பாலும் கரோனா வைரஸ் தொடர்பான ஆலோசனைகளாகவே அமைந்தது.
கேள்வி நேரத்தின்போது, பல உறுப்பினர்களும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கைகளைக் கழுவுதல் போன்ற எளிய தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.
அதிமுக எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் ''நாடாளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்களைக் குறைக்துக் கொள்ளலாம்'' என்று பரிந்துரைத்தார்.
மாநிலங்களவையில் கரோனா பிரச்சினையை எழுப்பிய கேரளாவைச் சேர்ந்த உறுப்பினர் இளமாறன் கரீம் (சிபிஎம்) பேசுகையில், ''கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் கல்வி நிறுவனங்களையும் பிற இடங்களையும் மூடியுள்ளன, பொதுக்கூட்டங்களும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொது இடங்களைத் தவிர்க்க விரும்பிய ஏராளமான மக்கள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றியமைத்து வருகின்றனர். இதனால் விமான மற்றும் ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அரசாங்கம் தலையிட்டு விமான நிறுவனங்கள் மற்றும் இந்திய ரயில்வேயைத் தொடர்புகொண்டு ரத்து செய்வதற்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டாமென உத்தரவிட வேண்டும்'' என்றார்.
மேலும் பல உறுப்பினர்கள் கரீமுடன் உடன்பட்டதால், மாநிலங்களவைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு ''இது கருத்தில் கொள்ள வேண்டிய பரிந்துரை'' என்று கூறினார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் ''20 வினாடிகள் வரை கைகளைக் கழுவுதல், தும்மும்போது முகத்தை மூடிக்கொள்வது போன்ற எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்'' என்றார்.
''ஏடிஎம்களை ஏராளமான மக்கள் பயன்படுத்துவதால் வங்கிகள் அவற்றை முறையாகச் சுத்தப்படுத்த வேண்டும்'' என்று பாஜக எம்.பி. சஸ்மித் பத்ரா பரிந்துரைத்தார்.
பாஜக எம்.பி. விகாஸ் மகாத்மே ''யாரும் கோழி சாப்பிடக்கூடாது என்பது போன்ற வதந்திகளை அரசாங்கமும் அதன் நிறுவனங்களும் அகற்ற வேண்டும்'' என்றார்.
இதற்கிடையில், ''செலவினங்களைக் குறைக்க மாநிலங்களவைத் தேர்தலையும், மத்திய தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்'' என்று சரோஜ் பாண்டே (பாஜக) ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
டி குபேந்திர ரெட்டி (ஜே.டி.எஸ்) பேசுகையில், ''கர்நாடக நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண நீதிபதிகள் / நீதித்துறை அதிகாரிகளின் அனைத்துக் காலியிடங்களும் நிரப்பப்பட வேண்டும்'' என்றார்.
ஆர்.ஜே.டி.யின் மனோஜ் குமார் ஜா, ''வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் ஊதியங்களை 7-வது மத்திய ஊதியக்குழுவுக்கு ஏற்ப ஒரு நாளைக்கு 600 ரூபாயாக உயர்த்த வேண்டும்'' என்று பரிந்துரைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT