Published : 16 Mar 2020 11:20 AM
Last Updated : 16 Mar 2020 11:20 AM
மத்திய பிரதேச சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கடந்த வாரம் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, சிந்தியாவின் ஆதரவாளர்களான 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள்பதவி விலகினர். இதனால் அக்கட்சியின் பலம் 114-ல் இருந்து 92 ஆககுறைந்தது. இதையடுத்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உத்தரவிட வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் முதல்வர் கமல்நாத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘‘அரசியல் சாசன சட்டத்தின் 174 மற்றும் 175(2) ஆகிய பிரிவுகளின் கீழ், 16-ம் தேதி (இன்று) சட்டப்பேரவை கூட்டத் தொடர் எனது உரையுடன் தொடங்கும். எனது உரை முடிந்ததும் நீங்கள் (முதல்வர்) பேரவையில் நம்பிக்கை வாக்கு கோர வேண்டும். இந்த நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.’’ எனக் கூறியிருந்தார்.
ஆனால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது குறித்து பேரவைத் தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
சட்டப்பேரவை இன்று கூடும் என ஆளுநர் அறிவித்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று போபால் திரும்பினர். எனினும் அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லவில்லை. ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்தது.
இந்த பரபரப்பான சூழலில் ம.பி. சட்டப்பேரவை இன்று கூடியது. காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்து சேர்ந்தனர். கரோனா வைரஸ் பீதி காரணமாக பலர் முககவசம் அணிந்து அவைக்கு வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT