Published : 16 Mar 2020 09:40 AM
Last Updated : 16 Mar 2020 09:40 AM
புதுடெல்லி: வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் உணவு மற்றும் பொருட்களை வாங்குவோர் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிய உணவு பொருட்கள் தரமாக இல்லை என்று நிறுவனங்கள் மீது அளிக்கப்பட்ட புகாரின் எண்ணிக்கை இருமடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2018-19-ம் ஆண்டில் 1,053 புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில், 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2020-ம் ஆண்டு ஜனவரி வரை மட்டும் 1,955 புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், “ஆன்லைன் உணவு விநியோக தளங்கள் மூலம் தரமற்ற உணவை விற்பனை செய்யப்படுவதாக அமைச்சக கவனத்துக்கு வந்துள்ளன. அந்த புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் உணவுப் பாதுகாப்பு ஆணையரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
அதேபோல், இணைய வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராகவும் பல புகார்கள் வந்துள்ளதாக நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சகம் மாநிலங்களவையில் தகவல் அளித்துள்ளது. அதில், தேசிய நுகர்வோர் உதவி மையம் மூலம் வாடிக்கையாளர்களின் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, 2020-ம் ஆண்டு ஜனவரி வரை 5.65 லட்சம் புகார்கள் வந்துள்ளன. அதில் நான்கில் ஒரு பங்கு இணைய வர்த்தகம் தொடர்பாகவே உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT