Published : 15 Mar 2020 03:02 PM
Last Updated : 15 Mar 2020 03:02 PM
கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதையடுத்து ஏ.சி. ரயில் பெட்டிகளில் பயணிகளுக்குக் கம்பளிப் போர்வை, திரைத்துணி போன்றவை வழங்குவது நிறுத்தப்படுகிறது என்று மத்திய மற்றும் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளன.
கம்பளிப் போர்வை, திரை துணி போன்றவற்றை நாள்தோறும் துவைப்பதில்லை என்பதால், அதை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், படுக்கை விரிப்பு, சாதாரண போர்வை, துண்டு, தலையணை உறை போன்றவை நாள்தோறும் துவைக்கப்படும் என்பதால் அது வழக்கம்போல் வழங்கப்படும்.
இதுகுறித்து மேற்கு ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் கஞ்சனன் மகாத்புர்கர் நிருபர்களிடம் கூறுகையில், " ஏற்கனவே இருக்கும் விதிமுறையின்படி ஏசி. பெட்டிகளில் இருக்கும் திரைத்துணி, கம்பளிப் போர்வை போன்றவை ஒவ்வொரு பயணத்திலும் சலவை செய்வது இல்லை. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், இனிமேல், ஏசி பெட்டிகளில் பயணிகளுக்குக் கம்பளிப் போர்வை, திரைத்துணி வழங்குவது உடனடியாக நிறுத்தப்படுகிறது
ஏ.சி. பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் சொந்தமாகப் போர்வைகளை எடுத்துவருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தேவைப்பட்டால் கூடுதலாகப் படுக்கை விரிப்புகள் தரப்படும்" எனத் தெரிவித்தார்
இது தவிர ரயில்வேயின் கதவு கைபிடிகள் போன்றவற்றை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பிடிப்பதால் ஆழ்ந்து சுத்தம் செய்யுமாறு மத்திய ரயில்வே பணியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது
குறிப்பாகக் கதவு கைபிடிகள், ஜன்னல் பிடிகள், இருக்கை பிடிமானங்கள், சாப்பிடும் ட்ரை, கண்ணாடிக் கதவுகள், ஜன்னல் கம்பிகள், தண்ணீர் பாட்டில் வைக்கும் கிளிப், மேல் படுக்கை இருக்கும் கம்பிகள் ஆகியவற்றைத் தீவிரமாகச் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேஜாஸ் ரயிலில் ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒருமுறை ஏ.சி பெட்டிகளில் அனைத்து ஜன்னல் திரைத்துறைகளையும் மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவறைகளில் சோப்பு, நாப்கின் ரோல், சானிடைசர் போன்றவை வைக்கவும் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT