Published : 14 Mar 2020 07:22 PM
Last Updated : 14 Mar 2020 07:22 PM
கரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக, ஏப்ரல்-3-ம் தேதி நடைபெறுவதாக இருந்த பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பத்ம விருதுகள் அடுத்து எப்போது நடக்கும் என்பது குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று நோயை, பெரும் தொற்று என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது, இந்திய அரசும், கரோனா வைரஸ் தொற்றைப் பேரிடர் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது என்பதால் மக்கள் அதிகமான அளவில் கூட்டம் சேர வேண்டாம் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதை ஏற்று பல மாநிலங்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. மேலும், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், கண்காட்சிகள், போன்றவையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஏப்ரல் 3-ம் தேதி 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு முடிவு செய்து இன்று அறிவித்துள்ளது.
பத்ம விருது பெறும் 141 பேரில் 33 பேர் பெண்கள், 18 பேர் வெளிநாடுகளில் வசிப்பவர்கள், 12 பேருக்கு இறப்புக்குப் பின் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, மறைந்த அரசியல் தலைவர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், சுஷ்மா சுவராஜ் ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருதும், உடுப்பி மடத்தின் தலைவர் விஸ்வேஷதீர்த்த சுவாமிஜி ஸ்ரீ பெஜாவரா அதோக்காஜாவுக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது
இந்த விருதுகள் அடுத்து எப்போது வழங்கப்படும் என்பது குறித்து மத்திய அரசு புதிய தேதி ஏதும் அறிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT