Published : 14 Mar 2020 03:55 PM
Last Updated : 14 Mar 2020 03:55 PM
கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் போலீஸிடமிருந்து தப்பிய அமெரிக்கத் தம்பதி கொச்சி விமானநிலையத்தில் நேற்று சிக்கினர்.
இதையடுத்து, அமெரிக்கத் தம்பதி இருவருக்கும் கொச்சி கலமசேரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் கேரள மாநிலத்தில்தான் அதிகமாக இருந்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு கேரள அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரையும் கண்காணிப்புக்குள் கொண்டுவருகிறது
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்த தம்பதிக்குக் காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்த இருவரையும் போலீஸார் தடுத்து நிறுத்தி வைத்திருந்த நிலையில் இருவரும் தப்பிச் சென்றனர். ஏறக்குறைய 5 நாட்களுக்குப்பின் போலீஸிடம் சிக்கியுள்ளனர்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், " கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் இருந்து ஒரு தம்பதி கேரளாவுக்கு சுற்றுலா வந்தார்கள். இவர்கள் லண்டனிலிருந்து தோஹா சென்று, அங்கிருந்து கொச்சி வந்தார்கள். தோஹாவிலிருந்து வந்தார்கள் என்பதால், அவர்களைப் பரிசோதித்த போது கரோனா அறிகுறி இருந்ததால், அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்குள் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், போலீஸாரை ஏமாற்றிவிட்டுத் தப்பிய அந்த தம்பதி கொச்சியில் கதக்களி ஆட்டம் பார்த்துவிட்டு, அங்கிருந்து ஆழப்புழாவுக்கு சென்றனர். ஆழப்புழாவில் படகுவீட்டில் சவாரி செய்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் தங்கினர். அங்கிருந்து திருவனந்தபுரம் அருகே இருக்கும் வர்க்கலாவுக்குச் சென்றுவிட்டுமீண்டும் ஆலப்புழாவுக்குச் செல்ல தம்பதி முடிவு செய்தார்கள்.
அப்போது தம்பதி இருவருக்கும் லேசான காய்ச்சல், இருமல் இருந்துள்ளது. இதையடுத்து கொச்சிக்கு விமானத்தில் செல்ல விமானநிலையத்துக்கு வந்தபோது அங்குள்ள போலீஸாரிடம் அமெரிக்கத் தம்பதி சிக்கினர். அவர்கள் இருவரையும் போலீஸார் கலமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை நடத்தினர்.
தற்போது இருவரும் தனித் தனி அறையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தனர்
திருவனந்தபுரம் மாவட்டஆட்சியர் கே. கோபாலகிருஷ்ணன் கூறுகையில், " அமெரிக்கத் தம்பதி இருவரும் கேரளாவுக்குவந்தபின் இவர்களைக் கண்டுபிடிப்பது பெரிய சிரமமாக இருந்தது. இவர்கள் இருவரும் வர்க்கலாவில் உள்ள கடற்கரை விடுதியில் தங்கி இருந்தார்கள்.
இந்த இருவரும் எங்கெல்லாம் சென்றிருப்பார்கள் என்று வழித்தடம் அமைத்துத் தேடி இறுதியாகக் கண்டுபிடித்தோம். இருவருக்கும் கரோனா இருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவர்கள் கடந்த 15 நாட்களாக யாரையெல்லாம் பார்த்தார்கள், பேசினார்கள், எங்குப் பழங்கள், உணவுகள் சாப்பிட்டார்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவர்களையும் பரிசோதிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருவோர் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்க வைக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT