Published : 14 Mar 2020 01:57 PM
Last Updated : 14 Mar 2020 01:57 PM
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்த 4 பேர் மருத்துவமனையில் இருந்து திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவுக்கும் பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை இந்தியாவில் 85 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 17 பேர் வெளிநாட்டவர்கள். கரோனா வைரஸால் 2 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு மாநில அரசுகளும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் அடுத்தடுத்து சிலருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது. மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் நேற்று கூறும்போது, "வரும் 31-ம் தேதி வரைபள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மட்டுமே நடைபெறும். மும்பை, தாணே, நாக்பூரில் மால்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்படும்" என்று தெரிவித்தார்.
இந்தநிலையில் நாக்பூரில் கரோனா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபபட்டு தனிமைப்படுத்தபட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் 5 பேர் இன்று காலை திடீரென தலைமறைவாகி விட்டனர். அவர்கள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடம் ஏதும் கூறாமல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்று இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மற்றவர்களின் மருத்துவ முடிவுகள் இன்னமும் வரவில்லை. இதையடுத்து தப்பியோடியவர்களின் முகவரிக்கு காவலர்கள் சென்றனர். அவர்களை தேடி கண்டுபிடித்து அழைத்து வரும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
இறுதியாக அவரகள் தங்கள் வீடுகளில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களில் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வராத 4 பேரை மட்டும் அழைத்து வர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT