Published : 13 Mar 2020 09:02 PM
Last Updated : 13 Mar 2020 09:02 PM
அரசியல் ஊர்வலங்கள், போராட்டங்களின் போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் சேதம் ஏற்படுத்துபவர்களிடமிருந்தே சேதத்துக்கான இழப்பீட்டை வசூல் செய்வதற்கான ‘பொதுச்சொத்துக்களின் மீதான சேத இழப்பீடு மீட்பு அவசரச் சட்டம் 2020’ என்ற அவசரச் சட்டத்திற்கு இன்று மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
வெள்ளிக்கிழமை (13-3-20) அன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த போது இந்த அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது அமைச்சரவை.
அரசியல் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், சட்ட விரோத போராட்டங்களின் போது அரசுச் சொத்துக்கள், தனியார் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தால் வன்முறையில் ஈடுபட்டவர்களிடமிருந்தே அந்தத் தொகையை வசூல் செய்யும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை அனுமதி அளித்தது” என்று உ.பி. அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.
இதற்கான விதிமுறைகள் என்ன என்று கேட்ட போது, “விதிமுறைகள், கட்டுப்பாடுகள் வகுத்த பிறகு அனைத்தும் தெளிவு பெறும்” என்றார்.
“உச்ச நீதிமன்ற முடிவின் படி நஷ்ட ஈடு மீட்புத் தீர்ப்பாயம் ஒன்று அமைக்கப்படுவதற்குத் தேவையான அவசரச் சட்டத்திற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது” என்றார் அமைச்சர் சுரேஷ் குமா.ர்
இப்போதைக்கு அரசு உத்தரவான ஜி.ஓ. மூலம் சேதத்தொகை சேதம் ஏற்படுத்தியதாக அடையாளம் காணப்பட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகே தற்போது அவசரச்சட்டம் கொண்டு வரப்படுகிறது என்ரு அமைச்சர் சித்தார்த் நாத் சிங் தெரிவித்தார்.
கலவரத்தில் ஈடுபட்டு பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக 57 பேர்களை புகைப்படம், முகவரி உள்ளிட்ட அடையாளங்களுடன் உத்தரப் பிரதேச அரசு பேனர்களை லக்னோவில் ஆங்காங்கே வைத்தது, இது சட்டப்படி தவறு என்று உ.பி.உயர் நீதிமன்றம் அன்று கண்டித்து பதாகைகளை அகற்றுமாறு உத்தரவிட்டது.
ஆனால் இதனை எதிர்த்து உ.பி. அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. ஆனால் உச்ச நீதிமன்றம் அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்க்கு இந்த வழக்கை மாற்றி உத்தரவிட்டது. மேலும் பதாகைகளை அகற்றக் கோரிய அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவையும் ரத்து செய்ய மறுத்து விட்டது.
இவ்வாறு போஸ்டர்கள் வைப்பது அந்தரங்க உரிமையை மீறும் செயல் என்று கோர்ட் கூறியதோடு, சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றும் உ.பி.அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும் இவ்வாறு போஸ்டர்கள் வைத்து அடையாளப்படுத்துவது தங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது.
தற்போது அடுத்த வாரம் உ.பி. அரசின் மேல் முறையீட்டை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் நிலையில் உ.பி.அமைச்சரவை பொதுச்சொத்து சேத இழப்பீடு மீட்பு அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT