Published : 13 Mar 2020 07:56 PM
Last Updated : 13 Mar 2020 07:56 PM
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதையடுத்து, மாநிலத்தில் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை (1897) அம்மாநில அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி மும்பை, தானே, நவி மும்பை, நாக்பூர், புனே, பிம்ரி சின்ச்வாத் ஆகிய நகரங்களில் வரும் 30-ம் தேதி வரை திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடம், பூங்கா, நீச்சல் குளம் ஆகியவற்றை மூட முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு இன்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸுக்கு 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் 17 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது.
அதுகுறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே மும்பையில் இன்று நிருபர்களுக்குத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தொற்றுநோய் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
மும்பை, தானே, நவி மும்பை, நாக்பூர், புனே, பிம்ரி சின்ச்வாத் ஆகிய நகரங்களில் வரும் 30-ம் தேதி வரை திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடம், பூங்கா, நீச்சல் குளம் ஆகியவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதில் பிம்ப்ரி, சின்ச்சாவத்,புனே ஆகிய தொழிற்நகரங்களில் அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படக்கூடாது. தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தவாறு பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.
ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள், கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் வெளியூர்களுக்கு மக்கள் பயணிக்க வேண்டாம்.
மாநிலத்தில் 17 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் புனேவிலும், மும்பை, நாக்பூரில் தலா மூவரும், தானேவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கையாகவே மாநில அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அனைத்துப் பகுதிகளும் மூடப்பட்ட பின் சீனாவில் வூஹான் நகரில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளது. அதுபோல் மாநிலத்திலும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளோம்''.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT