Published : 13 Mar 2020 05:16 PM
Last Updated : 13 Mar 2020 05:16 PM
என் விடுதலையை என்னால் கூட நம்பமுடியவில்லை. வீட்டுக் காவலில் உள்ள அனைத்துத் தலைவர்களும் விடுவிக்கப்பட்ட பின் எதிர்காலம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும். எம்.பி.யுமான பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட 370-வது பிரிவை நீக்கி, சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றது மத்திய அரசு.
இந்த நடவடிக்கை எடுக்கும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்தது காஷ்மீர் நிர்வாகம். அதன்பின் இவர்கள் 3 பேரும், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்தது.
ஏறக்குறைய 7 மாதங்களாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை இன்று விடுவித்த காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதன்மைச் செயலாளர் ஷலீன் காப்ரா பிறப்பித்த உத்தரவில், "செப்டம்பர் 15-ம் தேதி பரூக் அப்துல்லா பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது திரும்பப் பெறப்படுகிறது. அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிடப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டாலும் மீதமுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா ஆகியோர் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தனது விடுதலைக்குப் பின், பரூக் அப்துல்லா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
" நான் விடுவிக்கப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. எனது விடுதலைக்குத் துணையாக இருந்த மாநில மக்கள், தேசத்தின் மக்கள், எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இன்னும் சுதந்திரம் முழுமையடையவில்லை,
ஏனென்றால், மற்ற தலைவர்களான மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் இன்னும் வீட்டுக் காவலில்தான் இருக்கிறார்கள். சில எம்எல்ஏக்கள் விடுதியிலும் வீடுகளிலும் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்திய அரசு உறுதியாக நல்ல முடிவை விரைவில் எடுக்கும் என நம்புகிறேன். அனைவரும் சுதந்திரமான குடிமக்களாக வாழ்வதைப் பார்க்க விரும்புகிறேன். மற்ற தலைவர்கள் விடுவிக்கப்படும் வரை எந்த விதமான அரசியல் கருத்துகளையும் பேசப்போவதில்லை.
மற்ற தலைவர்களும் விடுவிக்கப்பட்ட பின், எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்".
இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT