Published : 13 Mar 2020 04:15 PM
Last Updated : 13 Mar 2020 04:15 PM
உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸைத் தடுப்பதில் சார்க் நாடுகள் இணைந்து திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்துவதில் உலகிற்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்து அச்சுறுத்தி வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மெல்லத் தலைகாட்டத் தொடங்கியுள்ள கரோனா வைரஸ் தாக்கத்துக்கு இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தீவிரமான தடுப்பு வழிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு பிரச்சாரங்களைச் செய்து வருகிறது
இந்நிலையில், பிரதமர் மோடி காணொலி கலந்தாய்வு மூலம் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு கரோனா வைரஸ் தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் எதிர்த்து போரிடுவது தொடர்பாக சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நம்முடைய நாட்டு மக்கள் ஆரோக்கியமாகவும், நலமாகவும் வாழ்வதற்கு நாம் அனைவரும் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் கலந்தாய்வு செய்ய வேண்டும்.
நம்முடைய இந்த பூமி கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போரிட்டு வருகிறது. கரோனா வைரஸை எதிர்க்கவும், தடுக்கவும் பல்வேறு விதங்களில், அரசுகள், நிர்வாகிகள், அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
உலகில் குறிப்பிட்ட அளவு மக்கள் தொகையைத் தெற்காசியா கொண்டுள்ளது. மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை நாம் ஒவ்வொரு நேரத்திலும் உறுதி செய்ய வேண்டும். சார்க் நாடுகள் அனைத்தும் இணைந்து ஒன்றாகச் செயல்பட்டு இந்த உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
சார்க் நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT