Published : 13 Mar 2020 12:56 PM
Last Updated : 13 Mar 2020 12:56 PM
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கி இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு எந்தவிதமான உயிரிழப்பும் இல்லாமல் தவிர்த்து வந்த நிலையில், கர்நாடக மாநிலம் கலாபுர்கியில் முதல் முறையாக 76 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய இந்த கரோனா வைரஸ் தாக்கம் அங்கு படிப்படியாகக் குறையத் தொடங்கி ஒற்றை இலக்கத்தில் பாதிப்பு குறைந்துவிட்டது. ஆனால், சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளில் இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மெல்லப் பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸைத் தடுக்க ஏராளமான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இருப்பினும் கரோனா வைரஸ் ஆங்காங்கே பரவி வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
''கரோனா வைரஸுக்கு இதுவரை நாட்டில் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை டெல்லியில் 6 பேருக்கும், உத்தரப் பிரதேசத்தில் 10 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் 5 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் கர்நாடக மாநிலம் கலாபுர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து கடந்த மாதம் 29-ம் தேதி திரும்பிய அந்த முதியவருக்கு ஆஸ்துமா, ரத்தக் கொதிப்பு இருந்துள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதிலும் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் உயிரிழந்தார்.
இதுவரை மகாராஷ்டிர மாநிலத்தில் 11 பேரும், லடாக் யூனியன் பிரதேசத்தில் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ராஜஸ்தான், தெலங்கானா, தமிழகம், ஜம்மு காஷ்மீர், ஆந்திர மாநிலம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தில் இதுவரை 17 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒட்டுமொத்தமாக 75 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 17 பேர் வெளிநாட்டவர்கள்’’.
இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 75 பேரிடம் தொடர்பு வைத்திருந்த 1,500 பேர் தீவிரக் கண்காணிப்பிலும், நாடு முழுவதும் 30 ஆயிரம் பேர் கண்காணிப்பிலும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT