Published : 13 Mar 2020 11:37 AM
Last Updated : 13 Mar 2020 11:37 AM
உன்னாவ் சிறுமியின் தந்தை கொல்லப்பட்ட வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு டெல்லி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, சசி பிரதாப் சிங் என்பவரிடம் தன்னை வாகனத்தில் ஏற்றிச் சென்று கிராமத்தில் விடுமாறு கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சசி பிரதாப் சிங் தனது ஆதரவாளர்களை தொலைபேசியில் அழைத்தார்.
இதனால், அங்கு வந்த குல்தீப் செங்காரின் சகோதரர் அதுல் சிங் செங்கார் மற்றும் அவரது நண்பர்கள் பெண்ணின் தந்தையை தாக்கியதுடன் காவல் நிலையத்திலும் ஒப்படைத்தனர். பின்னர், அவர் இறந்தார்.
இதுதொடர்பான வழக்கும் டெல்லி நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி தர்மேஷ் ஷர்மா இன்று தீர்ப்பளித்தார். குல்தீப் செங்கார், அவரது சகோதரர் அதுல் சிங் செங்கார் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக தீர்ப்பளித்தார். அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT