Published : 13 Mar 2020 10:12 AM
Last Updated : 13 Mar 2020 10:12 AM

சிஏஏ எதிர்ப்பாளர்களின் பேனர் விவகாரம்: உ.பி. அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக சட்டத்தில் இடமில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி

குடியுரிமை சட்ட எதிர்ப்பாளர்களின் பேனர் விவகாரத்தில் உத்தரபிரதேச அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக சட்டத்தில் இடம்இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை என்றும் தெரிவித்துவிட்டது.

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகக் கூறி 57 பேரின்புகைப்படம், முகவரி அடங்கிய பேனர்கள் மாநில அரசு சார்பில் லக்னோ நகர சாலை ஓரங்களில் வைக்கப்பட்டன.

மாநில அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பேனர்களை உடனடியாக அகற்றுமாறு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது.

இதை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் அனிருதா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன்பு நேற்றுவிசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக சட்டத்தில் இடம் இல்லை என தெரிவித்தனர்.

மேலும் “இந்த மனுவை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுதான் விசாரிக்க வேண்டும். எனவே, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவிடம் இதுகுறித்து நீதிமன்ற பதிவாளர் தெரிவிக்க வேண்டும்” எனநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x