Published : 13 Mar 2020 09:42 AM
Last Updated : 13 Mar 2020 09:42 AM
தேசிய மக்கள் தொகை பதிவேட் டுக்கு (என்பிஆர்) எவ்வித ஆவண மும் தேவையில்லை. சந்தேக குடிமகன்கள் என்று யாரும் வகைப்படுத்தப்படமாட்டார்கள் என மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்று வருகிறது. மக்களவையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற விவாதத்தின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளித்தார். அவர் கூறும்போது, ‘‘டெல்லிவன்முறை சம்பவங்கள் தொடர்பாக அப்பாவிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அதேநேரம் கலவரத்தில் ஈடுபட்டோர் யாரும் தப்ப முடியாது’’ என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் இறுதியில் அமைச்சர் அமித் ஷா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
டெல்லி கலவரத்தின்போது போலீஸார் நேர்மையாக செயல்பட்டனர். கலவரம் மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த விவகாரத்தில் என் மீது என்ன குறை வேண்டுமானாலும் கூறுங்கள். ஆனால் டெல்லி போலீஸார் மீது குறை கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
டெல்லி கலவரத்துக்காக பலர் நிதி வழங்கியுள்ளனர். அவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். மதம், சாதி, கட்சி வேறுபாடு இன்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் அனைவரும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவார்கள்.
டெல்லி கலவரம் தொடர்பாகஇதுவரை 2,647 பேர் பிடிபட்டுள்ளனர். கலவரத்தின்போது உளவுத் துறை அதிகாரி அங்கித் ஷர்மாவை கொலை செய்தவர்களையும் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி கலவரத்தின்போது ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்களிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்கப்படும்.
கலவரத்தை தூண்டும் வகையில் வெறுப்புணர்வு பிரச்சாரம்செய்த சமூக வலை கணக்குகள் மூடப்பட்டுள்ளன. அவர்கள் யாரும் தப்ப முடியாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பின்போது எவ்வித ஆவணங்களும் தேவையில்லை. சந்தேக குடிமகன்கள் என்று யாரும் வகைப்படுத்தப்பட மாட்டார்கள். கணக்கெடுப்பின்போது கேட்கப் படும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டும் போதும். பதில் அளிக்கப்படாத கேள்விகளுக்கான இடங்கள் வெற்றிடமாக விடப்படும்.
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT