Last Updated : 12 Mar, 2020 09:06 PM

 

Published : 12 Mar 2020 09:06 PM
Last Updated : 12 Mar 2020 09:06 PM

கரோனாவுக்கு தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி விளக்கம்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸுக்கு எப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்பதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் மூத்த மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

கரோனா வைரஸ் உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 17 வெளிநாட்டவர் உள்பட 76 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை எந்த நாடும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவில்லை.

இந்த சூழலில் கோவிட்-19 நோய்க்கு எப்போது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று கேட்டதற்கு ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைமை மருத்துவர் ராமன் ஆர் கங்காகேதார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது

இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ள கரோனா வைரஸை புனேயில் உள்ள தேசிய வைராலஜி அமைப்பு வெற்றிகரமாக தனிமைப்படுத்தி வருகிறது. கரோனா வைரஸ் தடுப்பு மருந்து தயாரிக்க இரு வழிகள் இருக்கின்றன. முதலாவதாக வைரஸின் மரபணு தொடர் எவ்வாறு இருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கு ஏற்றார்போல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது. அல்லது, வைரஸின் மாறிய உட்பிரிவை அடிப்படையாக வைத்து நாம் தடுப்பு மருந்தை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

கரோனா வைரஸை தனிமைப்படுத்திப் பார்ப்பது என்பது கடினமானது. ஆனால், புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் வெற்றிகரமாக 11 கரோனா வைரஸ்களை பிரித்து ஒதுக்கியுள்ளார்கள். இதற்கான மருத்துவரீதியான சோதனை முயற்சிகள், ஒப்புதல்கள் துரிதப்படுத்தப்பட்டால், ஒரு ஆண்டு முதல் இரண்டரை ஆண்டுக்குள் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட முடியும்.

ஒரு சில வைரஸ்களுக்கு, தடுப்பு மருந்துகள் கொடுத்தால், அதன் நோய் தொற்று தன்மை அதிகரிக்கக் கூடும் அல்லது விரிவடையக்கூடும். ஆதலால் இருவழிகளையும் நாம் ஆய்வு உற்றுநோக்க வேண்டும், அதற்கு நீண்டகாலம் தேவைப்படும் என்பதைக் காரணியாகக் கொள்வது அவசியம், அதில் ஆபத்தும் இருக்கிறது. இப்போது நம் நாட்டில் கரோனா வைரஸ் வந்துவிட்டது, அதை முடிந்தவரைத் தடுக்க முயல வேண்டும், போரிட வேண்டும், அடுத்து என்ன நடக்கிறது என்பதற்காகக் காத்திருக்க வேண்டும்

இந்திய அரசு 52 ஆய்வுக் கூடங்களை உருவாக்கி மாதிரிகளைப் பரிசோதித்து வருகிறது, இதில் 57 ஆய்வுக்கூடங்கள் கோவிட்-19 மாதிரிகளை மட்டும் பரிசோதிக்க உருவாக்கப்பட்டவை. மேலும், ஒரு லட்சம் பரிசோதனை கருவிகள் கூடுதலாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x