Published : 12 Mar 2020 06:59 AM
Last Updated : 12 Mar 2020 06:59 AM
இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் ஹூபெய் மாகாணம்வூஹான் நகரிலிருந்து பரவத்தொடங்கிய கோவிட்-19 வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். சீனா மட்டுமல்லாமல் தென் கொரியா, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, இந்தியா உள்ளிட்ட 119 நாடுகளிலும் கோவிட்-19 வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் நேற்றுமுன்தினம் வரை இந்த வைரஸால் 61 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று நிலவரப்படி இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்தது.கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் உறவினர்களுக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் சந்தேகிக்கப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாநில, மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளன.
மேலும் இந்தியா முழுவதும் தற்போது 52 கோவிட்-19 வைரஸ் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர கூடுதலாக 57 இடங்களில் ஆய்வகங்களை அமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
4 ஆயிரம் பேர் உயிரிழப்பு
இதுவரை கோவிட்-19 வைரஸுக்கு உலகம் முழுவதும் 4,378 பேர்மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 1,21,246 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
கேரளா, டெல்லி, உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 63 பேர் இந்த வைரஸால்பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலி,ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
76 வயதான முகமது உசேன் சித்திக் கர்நாடகா மாநிலம் குல்பர்காமருத்துவ அறிவியல் மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் ஹைதராபாத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கேரளாவில் எச்சரிக்கை
கேரளாவிலும் கோவிட்-19 வைரஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநில மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்தார்.
இத்தாலியில் இருந்து கடந்த மாதம் 29-ம் தேதி கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதியும், மகனும் கொச்சி வந்தனர். அவர்கள் கேரளாவந்தது சுகாதாரத் துறையினருக்கு முறையாக தெரிவிக்கப்படவில்லை.
சமீபத்தில் இந்த தம்பதியின் வயதான பெற்றோருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக அவர்கள் மருத்துவமனைக்கு சென்றனர். சந்தேகத்தின் பேரில் இவர்களின் ரத்த மாதிரி சோதனை செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கோட்டயம் அரசு மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் உறவினர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் இத்தாலியில் இருந்து வந்தவர்கள் பற்றிய விவரம் தெரிய வந்தது. அவர்களையும் சுகாதாரத்துறையினர் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
இதில், இத்தாலி தம்பதியின் உறவினர்கள், சகோதரர்கள் என 11 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதுபோல இத்தாலியில் இருந்து திரும்பிய இன்னொரு தம்பதியின் 3 வயது குழந்தைக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தையின் பெற்றோருக்கும் கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதன் மூலம் கேரளாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
கேரளா முழுவதும் இத்தாலி,அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 1,496 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,236 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ பரிசோதனையில் உள்ளனர். 259 பேர் மருத்துவமனைகளில் உள்ள தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாலியில் இருந்து திரும்பிய 45 பேர்தனி வார்டில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கோவிட்-19 வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் 7-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கட்டாய விடுப்பு விடப்பட்டுள்ளது.
இவர்களுக்கான பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல கேரளாவில் பொதுவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில்கள், ஆலயங்கள், மசூதிகளில் அதிகளவில் மக்கள் திரள வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, வருகிற 13-ந்தேதி மாதாந்திர பூஜைக்காக திறக்கப்படும். 18-ம் தேதி வரை வழிபாடுகள் நடக்கும். இதில் பக்தர்கள் பங்கேற்க வேண்டாம் என்று திருவாங்கூர் தேவசம் போர்டு கூறியுள்ளது.
மேலும் வரும் 31-ம் தேதி வரை கேரளாவில் தியேட்டர்கள் மூடப்படும். மூணாறு, தேக்கடி உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டினர் வர தடை
கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலையொட்டி இந்திய அரசுபல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு நாட்டினர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வழக்கமான விசாக்கள், இ-விசாக்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த 3 நாடுகளை சேர்ந்தவர்களை தவிர இங்கு கடந்த 1-ஆம் தேதிக்கு பின்னர் சென்ற பிற நாட்டினருக்கும் இந்தியாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
948 பேர் வெளியேற்றம்
கோவிட்-19 வைரஸ் பாதித்த வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்த நிலையில் அவர்களில் 948 பேர் மீண்டும் அவர்களது நாட்டுக்கே திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்கள் மாலத்தீவு, மியான்மர், வங்கதேசம், சீனா, அமெரிக்கா, மடகாஸ்கர், நேபாளம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT