Published : 11 Mar 2020 11:52 AM
Last Updated : 11 Mar 2020 11:52 AM
காங்கிரஸ் அரசைக் கலைப்பதை விட்டுவிட்டு, பெட்ரோல் விலையைக் குறைப்பீர்களா என்று பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்றார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததில் அக்கட்சியின் இளம் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. எனினும், அவருக்கு முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்தார்.
அடுத்தபடியாக கட்சியின் மாநிலத் தலைவர் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். அதுவும் நடக்கவில்லை. மேலும் விரைவில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலிலும் இடம் தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கட்சித் தலைமை மீதும் சிந்தியா கடும் அதிருப்தி அடைந்தார்.
இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா (49) காங்கிரஸிலிருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த அவர் இன்று பாஜகவில் இணைவார் எனத் தெரிகிறது. இதையடுத்து, அம்மாநிலத்தைச் சேர்ந்த 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்று பதவி விலகினர். இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான ஆட்சி, பெரும்பான்மையை இழந்து கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே சவுதி அரேபியா மற்றும் ரஷ்யா இடையிலான கச்சா எண்ணெய் போர் மற்றும் கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் ஆகியவற்றால் கச்சா எண்ணெய் விலை 29 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக சரிந்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ''இந்தியப் பிரதமரே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசைக் கலைப்பதில் நீங்கள் ஓய்வில்லாமல் பணியாற்றும்போது, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை 35 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததைக் கவனிக்காமல் போயிருப்பீர்கள். கச்சா எண்ணெய் விலைக் குறைவின் பயனை இந்தியர்களுக்கு நீங்கள் அளிப்பீர்களா?
1 லிட்டர் பெட்ரோலின் விலையை 60 ரூபாய்க்கும் குறைவாக நிர்ணயிப்பீர்களா? இது நிச்சயம் நலிவடைந்த இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவியாக இருக்கும்'' என்று ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT