Published : 11 Mar 2020 08:07 AM
Last Updated : 11 Mar 2020 08:07 AM

உ.பி.யில் 4 வருடங்களுக்கு பின்பு ஹோலியில் இணைந்த முலாயம் சிங் குடும்பம்

முலாயம் சிங்

புதுடெல்லி

ஆர்.ஷபிமுன்னா

நான்கு வருடங்களுக்கு பின் நேற்று ஹோலிப்பண்டிகையில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் குடும்பத்தார் ஒன்றிணைந்துள்ளனர். இது 2022-ல் வரவிருக்கும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முன்னோட்டமாகப் பார்க்கப் படுகிறது.

வட மாநிலங்களின் முக்கியப் பண்டிகையான ஹோலி நேற்று கொண்டாடப்பட்டது. இதன் விழாவில் 4 வருடங்களுக்கு பின் முலாயம்சிங் குடும்பத்தார் தம் சொந்த ஊரான சிஃபையில் ஒன்றுகூடினர். இதில், முலாயமு டன், அவரது மகன் அகிலேஷ்சிங் யாதவ், சகோதரர்களான ஷிவ்பால் சிங் யாதவ் மற்றும் பேராசிரியர் ராம்கோபால் யாதவ், குடும்ப வாரிசுகளும் முன்னாள் எம்.பிக் களுமான அக் ஷய்குமார் யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோரும் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

இவ்விழாவில் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ், கருத்து வேறுபாடுகளை களைந்து தன் சித்தப்பா ஷிவ்பாலின் கால்களை தொட்டு ஆசிர்வாதம் பெற்றார். இதேபோல், அகிலேஷின் ஆதர வாளரான ராம்கோபாலின் கால் களை ஷிவ்பால் தொட்டு வணங்கினார்.

நான்கு வருடங்களுக்கு முன்புவரை இதுபோல் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகளில் முலாயமின் குடும்பத்தார் தம் சொந்த ஊரான ஏட்டா மாவட் டத்தின் சிஃபையில் கட்சி தொண்டர்கள் முன் ஒன்றுகூடுவது வழக்கம். 4 வருடங்களுக்கு பின் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய தன் பின்னணியில் உபி சட்டப் பேரவை தேர்தல் இருப்பதாகக் கருதப்படுகிறது. இது வரவிருக் கும் தேர்தலின் முன்னோட்ட நிகழ்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.

பாஜக ஆளும் உ.பி.யில் முக்கிய எதிர்க்கட்சியாகவும், நான்கு முறை ஆட்சி செய்த கட்சியாகவும் இருப்பது சமாஜ்வாதி.

இதன் நிறுவனர்களில் ஒரு வராகவும் கட்சியின் முக்கியத் தூணாகவும் முலாயம் சிங்கின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவ் இருந்தார். முலாயமின் மகனான அகிலேஷ்சிங் யாதவ் கட்சியின் தலைவரானதும் அவருக்கு சித்தப்பா ஷிவ்பாலுடன் மோதல் ஏற்பட்டது. அப்போது முதல் நான்கு வருடங்களாக முலாயமின் குடும்பத்தார் தனித்தனியாக ஹோலி பண்டிகை கொண்டாடி வந்தனர். இதனால், கட்சி உடையும் நிலைக்கு தள்ளப் பட்டதுடன், ஷிவ்பால் புதிய கட்சியையும் துவங்கினார்.

இந்நிலையில், 2017-ல் நடை பெற்ற உபி சட்டப்பேரவை தேர் தலில் சமாஜ்வாதியிடம் இருந்து ஆட்சியை பாஜக கைப்பற்றியது. இதில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்தும் சமாஜ்வாதிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை. பிறகு மக்களவை தேர்தலில் தம் முக்கிய அரசியல் எதிரியான மாயாவதியுடன் கூட்டணி வைத்து சமாஜ்வாதி போட்டியிட்டது.

இதிலும் படுதோல்வி கிடைக் கவே, இதன் பின்னணியில் சமாஜ் வாதி தலைவர்கள் இடையிலான மோதலும் ஒரு காரணமாகக் கருதப்பட்டது. தற்போது ஹோலி பண்டிகையில் அவர்கள் இணைந் தது தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஷிவ்பால் ஏற்கெனவே சமாஜ்வாதியுடன் மீண்டும் இணைவது குறித்து விருப்பம் தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x