Published : 10 Mar 2020 12:01 PM
Last Updated : 10 Mar 2020 12:01 PM

மத்திய பிரதேச அரசுக்கு ஆபத்து; கர்நாடகா பாணியில் ஆட்சி கவிழ்ப்பு? 

மத்திய பிரதேச காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளதை தொடர்ந்து அங்கு விரைவில் கர்நாடகா பாணியில் ஆட்சி கவிழக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய பிரதேசத்தில் கடந்தமுறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பகுஜன் சமாஜ் 2, சமாஜ்வாதி 1, சுயேச்சை 4 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவி கிடைக்காததால் ஜோதிராதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த சூழலை பயன்படுத்தி 107 எம்எல்ஏ-க்களைக் கொண்டுள்ள பாஜக ஆட்சியை கைப்பற்ற முயற்சித்தது.

இதன் தொடக்கமாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் சிலரை ஹரியாணாவின் குருகிராமில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்கள் மத்திய பிரதேசம் திரும்பிய நிலையில் அவரகளுடன் மேலும் சிலர் இணைந்தனர். மொத்தமாக அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் நேற்று பெங்களூரு சென்றுள்ளனர்.
அவர்கள் பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூருவில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 எம்எல்ஏக்களும் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்கள் ஆவர்.

இவர்கள் 19 பேரும் விரைவில் கர்நாடக பாணியில் விரைவில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்கள் எனத் தெரிகிறது. அவ்வாறு ராஜினாமா செய்தால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும்.

20 பேர் ராஜினாமா செய்தால் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 100 ஆக குறையும். அதேசமயம் பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107 ஆக இருக்கும். இதைடுத்து அதிக எம்எல்ஏக்கள் கொண்ட கட்சியான பாஜக ஆட்சியமைக்கும்.

பதவி விலகிய எம்எல்ஏக்கள் மீண்டும் தேர்தல் நடக்கும்போது பாஜக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏக்களாக பதவி ஏற்பவர். அவர்களில் சிலருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இவை அனைத்தும் அதிகாரபூர்வ மற்ற தகவல்களாக தற்போது வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x