Published : 10 Mar 2020 07:15 AM
Last Updated : 10 Mar 2020 07:15 AM
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவித காய்ச்சல் பரவியது. இதற்கு கோவிட்-19 (கரோனா) வைரஸ் காரணம் என ஆய்வில் தெரியவந்தது. பின்னர் சீனாவில் வேகமாக பரவிய இந்த காய்ச்சல், இத்தாலி, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 1.10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,825 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது இந்தியாவிலும் இப்போது பரவத் தொடங்கி உள்ளது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து வருவோர் விமான நிலையங்களிலேயே பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் இதுவரை 3,003 பேரின் ரத்த மாதிரிகள் கோவிட்-19 வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 2,694 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதுவரை 45 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வரை 39 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த தம்பதி தங்கள் குழந்தையுடன் கடந்த 7-ம் தேதி இத்தாலியிலிருந்து கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு காய்ச்சல்இருந்ததால், ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவர்களுடைய 3 வயது குழந்தைக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் காஷ்மீர் (ஜம்மு) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் காய்ச்சல் காரணமாக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆனால், அவருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனையில் தெரிவந்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லிதுணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி மாநகர மேயர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஹர்ஷ் வர்தன் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “கோவிட்-19 வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளோம். ரத்த மாதிரிகளை உடனுக்குடன் பரசோதனை செய்யும் வகையில் ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் போதிய சுகாதார ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துமாறும் மாநிலஅரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
கோவிட்-19 வைரஸ் பாதிப்பு ஈரானில் அதிகமாக உள்ளதால் அங்குள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோப்மாஸ்டர் விமானம் நேற்று இரவு அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றது.
25 நாடுகளில் பள்ளிகள் மூடல்
உலகம் முழுவதும் சுமார் 25 நாடுகளில் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 30 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என ஐ.நா. மதிப்பீடு செய்துள்ளது.
சீனா, ஜப்பான், ஈரான், இத்தாலி,குவைத், லெபனான், மங்கோலியா, ஜார்ஜியா உள்ளிட்ட 14 நாடுகளில் நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்தியா, பிரான்ஸ், உள்ளிட்ட நாடுகளின் சில பகுதிகளில் மட்டும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT