Published : 09 Mar 2020 11:48 AM
Last Updated : 09 Mar 2020 11:48 AM
கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணியுடன் பூடான் சென்ற வழியில் தொடர்பு கொண்டதற்காக 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை நடைபெற்றுவருவதாக அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் பூடான் வந்த ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியை சோதனை செய்ததில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் அசாம் வழியாக பூடான் சென்றதால் அசாமில் குறைந்தது 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
அமெரிக்க சுற்றுலாப் பயணி கவுகாத்தியிலிருந்து பிரம்மபுத்ரா நதியில் எம்.வி.மகாபாகு ஆற்றுக் கப்பலில் என்ற பயணம் செய்தார். அந்தப் பயணக் கப்பலும் தற்போது அசாமில் உள்ள ஜோர்ஹாட் மாவட்டத்தில் நமாதிகாட் அருகே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த நாள் பூடானிலிருந்து விமானத்தில் செல்வதற்காக பரோ சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பாகவே மார்ச் 1 அன்று அமெரிக்க நாட்டவர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார், தற்போது 18 அறைகளைக் கொண்ட அந்தக் ஹோட்டல் கட்டிடத்தின் இரண்டாவது தளம் சீல் வைக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்டுள்ளதாக பூடானில் உள்ள ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து அவர் தொடர்ச்சியான ட்வீட்டுகளில் கூறியுள்ளதாவது:
பூடான் செல்வதற்காக அசாம் வந்த அமெரிக்கப் பயணியுடன் தொடர்பு கொண்ட 400 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் அனைவரிடமும் கோவிட் 19-க்கான தீவிர பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை ஐந்து நபர்களுக்கான சோதனைகள் நடத்தப்பட்டன. அவர்கள் யாருக்கும் நோய்த் தொற்று இல்லை. 76 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி வந்த எம்.வி.மகாபாகு பயணக் கப்பல் மற்றும் அவர் தங்கியிருந்த ரிசார்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 400 க்கும் மேற்பட்ட தொடர்புகளை மாநில சுகாதாரத் துறை கண்டறிந்தது.
தனிமைப்படுத்தப்பட்ட இந்த நபர்களை மருத்துவர்கள் மற்றும் நுண்ணுயிரியலாளர்கள் குழுக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு சுகாதாரத் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணி பூடானில் கொரோனா வைரஸ் நோய்த்தோற்று ஏற்பட்டதாக அறிவித்த பின்னர், மாநில சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள். அசாம் மக்கள் பீதியடைய வேண்டாம் என அசாமில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள் விடுங்கள். உங்கள் ஒத்துழைப்புடன், இந்த கொந்தளிப்பான காலங்களில் நாம் அனைவரும் பாதுகாப்பாக பயணம் செய்வோம்.
இவ்வாறு அசாம் மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT