Last Updated : 08 Mar, 2020 07:16 PM

 

Published : 08 Mar 2020 07:16 PM
Last Updated : 08 Mar 2020 07:16 PM

கரோனா வைரஸ்: ராஜஸ்தான் வந்த இத்தாலியர்கள் உடல்நிலையில் முன்னேற்றம்

ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரியின் ஆய்வகத்தில் சோதனையில் ஈடுபடும் மருத்துவ நிபுணர்கள்.

ஜெய்ப்பூர்

சுற்றுலா காரணமாக ராஜஸ்தானுக்கு வந்தபிறகு பரிசோதனையில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட இத்தாலிய தம்பதியினரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மாநிலத்தின் உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

சீனாவில் உருவாகி உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய் இதுவரை 3500 பேருக்கும் அதிகமானோரை பலிகொண்டுள்ளது. தென்கொரியா, ஈரான், இத்தாலி போன்ற நாடுகளில் கடுமையாக பரவியதால் அந்நாடுகளில் ஏராளாமானோர் உயிரிழந்தனர். வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் இந்தியாவிலும் தற்போது கரோனா பரவத் தொடங்கியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் இத்தாலியிலிருந்து ஒரு தம்பதியர் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்தனர். அவர்கள் இருவரும் பிப்ரவரி 21 முதல் 28 வரை ஜுன்ஜுனு, பிகானேர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் குழுவில் அங்கம் வகித்த வயதான இத்தாலியத் தம்பதியருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.

கிட்டத்தட்ட 303 மாதிரிகள் எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரியின் ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டு, இத்தாலிய தம்பதிகள் தவிர யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜெய்ப்பூர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவரும் இத்தாலிய தம்பதிகள் நிலை குறித்து மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (மருத்துவ மற்றும் சுகாதார) ரோஹித் குமார் சிங் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த இத்தாலிய மனிதருக்கு இப்போது காய்ச்சல் இல்லை, அவரது நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. நிமோனியா அறிகுறிகள் குறைந்து அவரது ரத்த ஓட்டம் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது, மிகக் குறைந்த அளவுக்கான ஆக்ஸிஜன் (ஆதரவு) மட்டும் தேவைப்படுகிறது.

அதேபோல கரோனா பாதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியும் முற்றிலும் குணமாகி சிறப்பாக முன்னேற்றமடைந்துள்ளார்.

தம்பதியரில் கணவருக்கு மட்டும் நிலைமைகளின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, அடுத்த ஏழு முதல் பத்து நாட்களில் அவர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இவ்வாறு மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் (மருத்துவ மற்றும் சுகாதார) ரோஹித் குமார் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x