Published : 08 Mar 2020 12:15 PM
Last Updated : 08 Mar 2020 12:15 PM
கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தகவல் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் உலகம் முழுவதையும் மிரட்டி வருகிறது. சீனாவில் மட்டும் இதுவரை 3,400க்கும் அதிகமானோர் கரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர், 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் 90 நாடுகளுக்கும் அதிகமாகப் பரவியுள்ள கரோனா வைரஸால், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருந்த வுஹான் நகரில் இருந்து கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியா திரும்பினர். அவர்களைப் பரிசோதித்ததில் கரோனோ வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சையில் வைக்கப்பட்டனர். அதில் சிலர் குணமடைந்து சென்றனர்.
இந்நிலையில் கேரளாவில் புதிதாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள தந்தை, தாய், மகன் ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய உறவினர் 2 பேர் என 5 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இதில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேரும் சமீபத்தில் இத்தாலி சென்றுவிட்டு பத்தினம்திட்டாவுக்கு திரும்பியுள்ளனர். ஆனால், இத்தாலி ஏற்கனவே கரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்ட நாடு. அந்த நாட்டுக்குச் சென்றதை அவர்கள் மறைத்துவிட்டார்கள்.
இத்தாலியிலின் வெனிஸ் நகரிலிருந்து கத்தார் தலைநகர் தோஹா வழியாக, கடந்த மாதம் 29-ம் தேதி கொச்சி வந்து கார் மூலம் பத்தினம்திட்டாவுக்கு வந்துவிட்டனர். விமானத்தில் இவர்கள் 3 பேரும் பல்வேறு நபர்களுடன் பழகியதால், கரோனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், இத்தாலிக்குச் சென்றுவிட்டு வந்ததை அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவிக்கவில்லை. இவர்கள் 3 பேரும், பத்தினம்திட்டா திரும்பியபின், தங்களின் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
சமீபத்தில் உறவினர்களுக்குக் காய்ச்சல் ஏற்படவே அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டபோதுதான், அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, தங்களின் உறவினர்கள் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பிய விவரத்தைத் தெரிவித்தார்கள். அவர்களுக்கும் காய்ச்சல் இருந்தது.
அவர்களின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அவர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த 5 பேரும் தனித்தனியாக வார்டுகளில் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT