Last Updated : 07 Mar, 2020 08:28 PM

1  

Published : 07 Mar 2020 08:28 PM
Last Updated : 07 Mar 2020 08:28 PM

தமிழகத்தில் முதல்முறை; ஒருவருக்கு கரோனா வைரஸ் உறுதி: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு; மத்திய அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

இந்தியாவில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் முதல்முறையாக ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சீனாவை கதிகலங்க வைத்துவரும் கரோனா வைரஸ் உலக நாடுகளையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை 91 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் பலியாகியுள்ளார்கள், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இதுவரை கரோனா வைரஸால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த நிலையில் இன்று கூடுதலாக 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் இருந்து ஈரான் நாட்டுக்குச் சென்று திரும்பிய இருவருக்கும், ஓமனிலிருந்து தமிழகம் வந்தவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 3 நோயாளிகளின் உடல்நிலையும் சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தனி வார்டில் வைக்கப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே பஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சமீபத்தில் ஈரான் சென்று திரும்பினர். இவர்களுக்கு முதல்கட்ட சோதனையில் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால், அரசு இன்னும் உறுதி செய்யப்படவில்லை

மேலும், பூட்டானில் இரு அமெரிக்கர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது, அந்த அமெரிக்கர்களுடன் 150 பயணிகள் பல்வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றனர். அவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்கள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்

ஈரானில் இருந்து 108 இந்தியர்களின் ரத்த மாதிரி டெல்லிக்கு இன்று காலை வந்தது, அடுத்தகட்டமாக அங்கிருந்து இந்தியர்களின் ரத்தமாதிரிகள் வந்தபின் எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு அழைத்துவரப்பட உள்ளனர்

இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் சார்பில் 6 ஆராய்ச்சியாளர்கள் ரூ.10 கோடி மதிப்பிலான பரிசோதனைக் கருவிகளுடன் ஈரானுக்கு சென்றுள்ளனர். அங்கு புதிதாக ஒரு பரிசோதனைக் கூடம் இந்தியா சார்பில் அமைக்கப்பட உள்ளது.

7,108 விமான நிலையங்களில் 7 லட்சத்து 26 ஆயிரத்து 122பயணிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை முதல் இன்றுவரை 573 விமானங்களில் வந்த 73,766 பயணிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 52 ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன, கூடுதலாக 57 நகரும் பரிசோதனைக் கூடங்கள், மாதிரிகள் சேகரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை மூலம் 117..2 கோடி வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் வகையில் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் ஒலிபரப்பப்படுகின்றன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x