Published : 07 Mar 2020 03:41 PM
Last Updated : 07 Mar 2020 03:41 PM
கேரளாவில் இரு சேனல்களுக்கு மத்திய அரசு 48 மணி நேரம் தடை விதித்து, நீக்கியுள்ளது, அறிவிக்கப்படாத அவசரநிலை நாட்டில் நிலவுவதைக் காட்டுகிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
டெல்லி கலவரம் தொடர்பாக மலையாளத்தில் ஒளிபரப்பாகும் மீடியா ஒன், ஏசியாநெட் நியூஸ் ஆகிய இரு சேனல்கள், வகுப்பு வாதத்தைத் தூண்டும் விதத்தில் செய்திளை ஒளிபரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகளை ஒளிபரப்பிய ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி வரை ஒளிபரப்புத் தடை விதித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், நள்ளிரவே இரு சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்து, பின்னர் நீக்கியது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டித்து, காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
கேரளாவில் இரு மலையாள மொழிச்சேனல்களான ஏசியாநெட், மீடியா ஒன் ஆகியவற்றுக்கு 48 மணிநேரம் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது கண்டிக்கத்தக்கது.
நாட்டில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுகிறது. இந்த போக்கு மிகவும் ஆபத்தான போக்கு. எதிர்காலத்தில் வரும் அபாயத்தை உணர்த்தும் சமிக்ஞையாகவே பார்க்கிறேன்.
பத்திரிகை சுதந்திரத்தில் மத்திய அரசு தனது வரம்பை மீறிச் செயல்பட்டு, தனது எல்லைகளை மீறுகிறது. யாரேனும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும், சங் பரிவார் அமைப்புகளையும் விமர்சித்தால், இதுதான் பாடம் என்ற வகையில் மிரட்டல் விடுத்துள்ளது.
இத்தகைய போக்குக்கு எதிராக ஒவ்வொருவரும் ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அச்சத்தை உண்டாக்கி ஒவ்வொருவரும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறார்கள் என மத்திய அரசு தந்திரமாகச் செயல்படுகிறது
இதுபோன்ற போக்கு அடிக்கடி நாடாளுமன்றத்திலும், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய அமைப்புகளிடமும் எதிரொலிக்கிறது, நீதித்துறை மீது சமீபகாலமாக நடக்கிறது.
டெல்லி போலீஸார், ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சித்தது தடைவிதிக்கப்படுவதற்கான காரணம். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிப்பது எப்படி சட்டவிரோதமாகும். ஒவ்வொரு குடிமகனும் தங்களின் கருத்துக்களை அச்சமின்றி தெரிவிக்க அரசியலமைப்புச் சட்டம் உரிமைகளை வழங்கியுள்ளது.
நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது, அந்த சம்பவங்களை அறிந்து மக்களுக்குத் தெரிவிக்க ஊடகங்களுக்கு உரிமை இருக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனச் சொல்லப்படும் ஊடகம் சுதந்திரமாகவும், நியாயமாகவும்,நடுநிலையோடும் செயல்பட வேண்டும்
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT