Published : 05 Mar 2020 06:06 PM
Last Updated : 05 Mar 2020 06:06 PM
நிர்பயா குற்றவாளிகளை ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. குற்றவாளிகளுக்கு மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முகேஷ் குமார் சிங் (32), பவன் (25), வினய் ஷர்மா (26), அக்ஷய் குமார் சிங் (31) ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் பிப்ரவரி 17ம் தேதி அளித்த டெத் வாரண்ட்டில் மார்ச் 3ம் தேதியை தூக்கிலிடும் தேதியாக அறிவித்தது.
ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை டெத் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நிறுத்தப்பட்ட நிலையில் மார்ச் 3ம் தேதி டெத் வாரண்டும் செயல்படாமல் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
பவன் குமார் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் நிராகரித்தார். இதனால் தூக்கு தண்டனை குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய தேதியைக் கோரி டெல்லி அரசு, நீதிமன்றத்தில் மனு செய்தது. இந்த மனு கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் கருணை மனு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து விட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதனையடுத்து குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்களும், கருணை மனு தொடர்பாக ஏதும் நிலுவையில் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து நான்கு குற்றவாளிகளையும் வரும் 20-ம் தேதி தூக்கிலிட நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்தநிலையில் நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் தனித்தனியாக தூக்கிலிட வேண்டும் எனக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் அனைவரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் தண்டனை நிறைவேற்றுவதை காலதாமதம் செய்யும் நோக்கத்துடன் இதுபோன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்க விசாரணையை வரும் மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மார்ச் 20-ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உச்ச நீதிமன்றம் விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT