

கரோனா வைரஸ் இறைச்சி உணவுகள் மூலம் பரவாது, எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவை உலுக்கி வரும் கரோனா வைரஸுக்கு (கோவிட் -19) அந்த நாட்டில் இதுவரை 3000 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது.
டெல்லி மற்றும் தெலங்கானாச் சேர்ந்த இருவருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்தது. டெல்லியைச் சேர்ந்தவர் சமீபத்தில் இத்தாலி சென்று திரும்பியுள்ளார். தெலங்கானாவைச் சேர்ந்தவர் துபாய் சென்று திரும்பியுள்ளார். இரு நோயாளிகளின் உடல் நிலையும் சீராக இருக்கிறது இதையடுத்து, இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் 28 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக மத்திய அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து வருவோருக்கு விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே கரோனா வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
இதுகுறித்து மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது:
இறைச்சி, முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகள் மூலம் கோவிட் -19 வைரஸ் பரவாது என்பதை கால்நடை வளர்ச்சித்துறை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் மக்களிடம் தவறான கருத்துகள் பரவி வருகின்றன. கரோனா வைரஸ் குறித்த சரியான புரிதல் இல்லாததால் சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். எனவே இறைச்சி உணவுகள் மூலம் கரோனா வைரஸ் பரவாது’’ எனக் கூறினார்.